×

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களின் விவசாய நிலங்களை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்: விதிமுறைகளுடன் அரசாணை வெளியீடு

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் உள்ள விவசாய நிலங்களை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது என விதிமுறைகளை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சேலத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்தார். இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக விதிமுறைகளை தமிழ்நாடு அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:
கடந்த பிப்ரவரி 21ம் தேதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குட்பட்ட விவசாய நிலங்களை விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். விவசாயம் அல்லாது வேறு எதற்காகவும் அந்த நிலங்களை பயன்படுத்த கூடாது. வேளாண் வளர்ச்சி மற்றும் அதிக பயிர் சாகுபடிகளுக்காக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாகுபடி பணிகளை மேற்கொள்ளலாம். மேலும் அதிக விளைச்சலை காணும் பொருட்டு, வேளாண் தொழில்கள் தொடர்பான தொழிலகங்களை தொடங்க மட்டுமே அனுமதிக்கப்படும்.

இதேபோல் வேளாண் மேம்பாட்டிற்கு ஆராய்ச்சி செய்ய அனுமதிக்கப்படும். இந்த விதிமுறைகளை அரசு பாதுகாப்பான ஆலோசனைகளுக்கு பிறகு வெளியிட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல வளர்ச்சிக்காக, திட்டங்கள் குறித்து விவசாயத்துறை அதிகாரிகள், வேளாண் இன்ஜினியர்கள், வேளாண் மார்கெட்டிங் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ம் தேதி வேளாண்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். திட்டங்களுக்கான அறிக்கைகள், வேளாண் பல்கலைகழங்களின் ஆலோசனையுடன், ஆராய்ச்சி செய்ததாக இருக்க வேண்டும். ஜூன் 30 முதல் டிசம்பர் 31க்குள் ஒரு அரையாண்டு திட்டத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

அதிகாரிகள், வேளாண் மண்டலத்தின் இயற்கை வளங்கள், நீர் மற்று மண்களை அளவீடு செய்யது அது குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும், எந்த மாதிரியான பயிர் செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும், பாதுகாக்க தேவையான தொழிலகங்களை பரிந்துரை செய்ய வேண்டும். அதிகாரிகளுக்கு பண படிகள், வேலைக்கான செலவு தொகைகள் வழங்கப்படும். மேலும் பாதுகாக்கப்பட்ட பகுதிக்கான குழுவில் வேளாண்துறை செயலார் தலைவராகவும், வோளண்துறை இயக்குநர் உறுப்பினர் செயலாளராகவும், தோட்டக்கலை இயக்குனர், மாசுக்கட்டுப்பாட்டுவாரிய தலைவர், தொழில் மற்றும் வர்த்தக இயக்குனர், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர், வேளாண்பல்கலை இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டிருந்தது.


Tags : zones ,Government Publication , Protected, Agricultural Zone, Agricultural Land, For Agriculture Only, Use, Regulation, Government Issue
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...