×

கல்வித்துறை அதிகாரிகளின் உத்தரவையும் மீறி அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டாய வசூல்: ஹெச்.எம், பிடிஏ மீது பரபரப்பு குற்றச்சாட்டு

சேலம்: கல்வித்துறை அதிகாரிகளின் உத்தரவையும் மீறி, அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டாய வசூல் நடப்பதாக பெற்றோர்   குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், பள்ளிகள் திறப்பு தாமதமாகி வருகிறது. அதேசமயம், அரசுப்பள்ளிகளில் தீவிர  மாணவர் சேர்க்கையும் நடந்து வருகிறது. கடந்த 17ம் தேதி முதல் 1, 6, 9ம் வகுப்புகளுக்கும், நேற்று முன்தினம் முதல் பிளஸ் 1 வகுப்பிலும்  மாணவர்கள் ஆர்வத்துடன் சேர்ந்து வருகின்றனர்.
வழக்கமாக அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கையின்போது, குறிப்பிட்ட சிறிய தொகை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், நடப்பாண்டு  கொரோனா ஊரடங்கு காரணமாக பெற்றோர்கள் பலர் வேலையிழந்து, பொருளாதார அளவில் மிகவும் நலிவடைந்துள்ளனர். இதனை கருத்தில்  கொண்டு, யாரிடமும், எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது என கல்வித்துறை அமைச்சரும், அதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர். ஆனால், சேலம்  மாவட்டத்தின் பல அரசுப் பள்ளிகளில் கட்டாய வசூல் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக ஆங்கில வழிக்கல்விக்கு அதிகளவில் பணம்  கேட்பதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர் தரப்பில் கூறியதாவது: தமிழக அரசுப்பள்ளிகளில் எந்தவித கல்வி கட்டணமும் இல்லை. அப்படியே இருந்தாலும், மாணவர்கள்  சேரும் போது குறைந்த அளவிலேயே பணம் கேட்பார்கள். ஆனால், சேலம் மாவட்ட பள்ளிகளில் 6ம் வகுப்பிற்கு 100,  9ம் வகுப்பிற்கு 105, பிளஸ்  1 வகுப்பிற்கு 500 என வசூல் செய்கின்றனர். இது ஒருபுறம் இருக்க ஆங்கில வழிக்கல்வி என்ற பெயரில், கொள்ளையடிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. ஆங்கில வழிக்கல்வி என்றால், 6ம்  வகுப்பிற்கு 1,500, 9ம் வகுப்பிற்கு 3,000, பிளஸ் 1 வகுப்பிற்கு 5,000 என கட்டாய வசூல் நடந்து வருகிறது. இதுகுறித்து சேர்க்கை பணியில்  உள்ள ஆசிரியர்களிடம் கேட்டால், தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் வசூல் செய்யும்படி கூறியிருப்பதால், நாங்கள் ஒன்றும்  செய்யமுடியாது என பதில் அளிக்கின்றனர். பள்ளியின் வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைக்காக வசூல் என்றால், அதற்கான குழு அமைத்து, திட்டத்தை தெளிவுபடுத்தி பெற்றோரிடம் விருப்பத்தின்  பேரில் வசூல் செய்யலாம். ஆனால் தற்போது, பெற்றோர்கள் வழங்கும் தொகைக்கு எந்தவித ரசீதும் வழங்கப்படுவதில்லை. மேலும், பதிவேடு எதுவும்  பராமரிக்கப்படவில்லை. இதனால் எதற்காக அந்த தொகை பெறப்படுகிறது என்பதையே மறைக்கின்றனர்.

ஏற்கனவே கொரோனாவால் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள பெற்றோர்கள், தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்திற்கு பயந்து,  தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால், இந்த சமயத்தில் இதுபோன்ற வசூல்களால் அவர்கள்  மேலும் மனவேதனை அடைந்துள்ளனர். இதனால், மீண்டும் தனியார் பள்ளியை நோக்கி செல்லும் சூழல் ஏற்பட்டு விடும். எனவே, கல்வித்துறை  அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு, அரசுப்பள்ளிகளில் கட்டாய வசூலில் ஈடுபடும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர்  கழக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பெற்றோர் தெரிவித்தனர்.

கல்வி அதிகாரி எச்சரிக்கை
அரசுப்பள்ளிகளின் கட்டண வசூல் தொடர்பாக, பெற்றோர்கள்  தரப்பில் இருந்து அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்து  தலைமை ஆசிரியர்களுக்கும், சேலம் மாவட்ட சிஇஓ கணேஷ்மூர்த்தி அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில்,  ‘‘மாணவர் சேர்க்கையின்போது மாணவர்களின்  பெற்றோரிடமிருந்து பணம் வசூல் செய்வதாக செய்திகள் வருவதாகவும், தலைமை ஆசிரியர்களுக்கு இது சார்ந்து அறிவுரை வழங்கும்படியும்,  பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். எனவே, பள்ளி தலைமை ஆசிரியர்கள் எந்தவித புகாருக்கும்  இடமளிக்கா வண்ணம்,எவ்வித கட்டணமும்  இன்றி மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும்,’’ என்று அறிவுறுத்தியிருந்தார்.


Tags : schools ,education authorities ,HM , HM, PDA ,charged ,sedition
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...