×

சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு:  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு-கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையாக அமைந்துள்ளது திம்பம் மலைப்பாதை. இதில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. அதிலும் ஒரு சில கொண்டை ஊசி வளைவுகள் அதிகளவு குண்டும் குழியுமாகவும், குறுகிய சாலையாகவும் அமைந்துள்ளன.

இதனால் பல முறை லாரிகள் கவிழ்ந்து விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாகவே உள்ளன. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு விபத்தானது ஏற்பட்டுள்ளது. இன்று காலை கர்நாடக மாநிலம் சுல்தான்பத்தேரியிலிருந்து காகித பண்டல்களை ஏற்றி வந்த லாரி ஒன்று, 6வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது, அதிக எடையுள்ள காரணத்தினால் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தானது இன்று காலை 6 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

இதனால் தமிழ்நாடு-கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் செல்லக்கூடிய அனைத்து சரக்கு லாரிகளும் இருபுறமும் தேங்கி நிற்கின்றன. அதாவது சுமார் 100க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள், பண்ணாரி சோதனைச் சாவடியிலும், ஆசனூர் சோதனைச் சாவடியிலும்  நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அதிகளவில் பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை தணிக்கை செய்யப்படாததால்தான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் விபத்து ஏற்பட்டு வெகுநேரமாகியும் லாரியை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சாலையின் இரு புறங்களிலும் 100க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன. தொடர்ந்து வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Tags : hill ,Satyamangalam ,Thimbam ,Satyamangalam Timbam Mountain Raod ,accident , Karnata, Tamilnadu Border, Satyamangalam, Timbam, Accident, lorry
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்..!!