×

சம்பளம் கொடுக்க பணமில்லை கோயில் நகைகளை அடகு வைக்க முடிவு: ரிசர்வ் வங்கியுடன் தேவசம்போர்டு ஆலோசனை

திருவனந்தபுரம்: கேரளாவில தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலை உள்பட 1,252 கோயில்களின் நகைகளை அடகு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. கேரள மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து கோயில்களும் மூடப்பட்டன. இதனால், அனைத்து தேவசம் போர்டுகளும் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றன. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் திருவிதாங்கூர் தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தேவசம் போர்டின் கீழ் மொத்தம் 1,252 கோயில்கள் உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயில் வருமானத்தை வைத்துதான் மற்ற கோயில்கள் அனைத்தும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

தேவசம்போர்டு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்காக மாதம் ரூ.35 கோடி தேவைப்படுகிறது. தொடர்ந்து கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது ஏற்பட்டு உள்ள நெருக்கடியை சமாளிக்க, கோயில்களில் உள்ள தங்கத்தை ரிசர்வ் வங்கியில் அடகு வைத்து பணம் பெற ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு, ரிசர்வ் வங்கியிடம் ஆலோசனை நடத்தி உள்ளார்.

* 190 பதவிகள் திடீர் குறைப்பு
நிதி பிரச்னை காரணமாக, திருவிதாங்கூர்  தேவசம்போர்டில் 50 பியூன்கள், 140 கிளார்க் பதவிகள் திடீரென குறைக்கப்பட்டுள்ளன. இது, ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

* ஏமாற்றும் மாநில அரசு
தேவசம்போர்டு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியத்துக்காக மாதம் ரூ.35 கோடி தேவை. இதனால், சபரிமலை கோயில் வருமானத்தை  ஈடுகட்ட திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு அரசு ரூ.100 கோடி கொடுப்பதாக அறிவித்து இருந்தது. ஆனால்,. இதுவரை ரூ.30 கோடி மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. இதனால், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைமை உருவாகி இருக்கிறது.

Tags : Reserve Bank ,mortgage temple jewelery ,consultation ,Devasthanam Board ,Devaswom Board , No money to pay salary, temple jewelery, mortgage, RBI, Devasthanam board advice
× RELATED அமெரிக்காவின் பெடரல் வங்கி 0.5% வட்டி விகிதம் குறைப்பு..!!