×

கொரோனா சூழலில் விவசாயிகள், வியாபாரிகள் அடையும் வேதனை புரியாமல் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதா ? : சரத்குமார் கண்டனம்

சென்னை : கொரோனா சூழலில் விவசாயிகள், வியாபாரிகள் அடையும் வேதனை புரியாமல் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதா என, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சரத்குமார் இன்று (ஆக.25) வெளியிட்ட அறிக்கை:

வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 வரை கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 565 சுங்கச்சாவடிகளில் தமிழகத்தில் இயங்கி வரும் 48 சுங்கச்சாவடிகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம்.

அதன்படி, ஏப்ரல் 1-ம் தேதி தமிழகத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு, கரோனா ஊரடங்கால் சுங்கச்சாவடி மூடப்பட்டிருந்ததால், ஏப்ரல் 16-ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருந்தது. தற்போது விருதுநகர், திருச்சி உட்பட மீதமுள்ள 21 சுங்கச்சாவடிகளுக்குக் கட்டண உயர்வு அறிவித்திருப்பது வேதனை அளிக்கிறது.

கொரோனா சூழலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வும், சுங்கக் கட்டண வரி உயர்வும் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகளின் மீது மேலும் பெரும் சுமையை ஏற்றும் செயல்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி ஏற்றத்தால் பொதுமக்கள் அடையும் வேதனையைப் போக்குவதற்கு வழிவகை செய்யாமல், அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் நடவடிக்கையை மேற்கொள்ளாமல் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவது, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது என அரசு தன் நிதி நெருக்கடியை மக்கள் மீது திணித்து அவர்களை மேலும் சிரமத்திற்குள்ளாக்குவதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை.

வாகனத்திற்கு சாலை வரி, சுங்கக் கட்டண வரி, பெட்ரோல், டீசலில் சாலை மேம்பாட்டு வரி என சாலையைப் பயன்படுத்துவதற்குப் பல வகையில் மக்களிடம் வரி வசூலிப்பது மட்டுமன்றி, எத்தனை ஆண்டுகளுக்கு சுங்கக் கட்டண வரி வசூலிக்கப்படும் என்ற வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் மக்களின் மீது சுமை ஏற்றும் சூழல் மாற வேண்டும்.

எனவே, கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு அதனை உறுதி செய்ய வேண்டும் எனவும், மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Tags : traders ,Sarathkumar , Raising customs duties without understanding the suffering of farmers and traders in the corona environment? : Sarathkumar condemned
× RELATED பிரசாரத்துக்கு நடுவே கொஞ்சம் டான்ஸ்.....