×

திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் முடிவை திரும்ப பெறக்கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் 50 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனத்திடம் குத்தகைக்கு விட ஒப்புதல் வழங்கப்பட்டது.

திருவனந்தபுரம் விமான நிலையத்தின் பராமரிப்பை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்த மத்திய அரசின் முடிவுக்கு ஒத்துழைப்பது கடினம் எனக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மத்திய அரசின் முடிவை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார் நிறுவனத்திற்கு ஏலத்தில் ஒப்படைத்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கடந்த வாரம் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று கேரள சட்டப்பேரவைக் கூட்டம் இன்று ஒருநாள் மட்டும் கூடியது. அப்போது கேரள முதல்வர் பினராயி விஜயன், தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். விமான நிலையத்தில் பெரும்பகுதிப் பங்கு மாநில அரசுக்கு இருப்பதால், அதை தனியாருக்கு வழங்கக் கூடாது. தனியார் நிறுவனம் டெண்டரில் குறிப்பிட்டிருந்த அதே விலையை வழங்க கேரள அரசும் தயாராக இருக்கிறது. ஆனால் திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது என்று பினராயி விஜயன் தெரிவித்தார். இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா பேசுகையில், மாநில அரசு கொண்டுவந்த இந்த தீர்மானத்தை மாநிலத்தின் நலனுக்காக நாங்கள் ஆதரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.



Tags : Kerala Legislative Assembly ,Airport ,Thiruvananthapuram , Thiruvananthapuram, Airport, Privacy
× RELATED அதிக பயணிகள் கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்