×

கைலாசா நாட்டில் வணிகம் செய்ய திருவண்ணாமலை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் : நித்தியானந்தா அறிவிப்பு!!

சென்னை : கைலாசா நாட்டில் வணிகம் செய்ய திருவண்ணாமலை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று சாமியார் நித்தியானந்தா கூறியுள்ளார். மதுரையைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் கைலாசாவில் தொழில் தொடங்க அனுமதி கோரி கடிதம் ஒன்றை வெளியிட்டார். அவரது கோரிக்கைக்கு பதிலளித்துள்ள நித்தியானந்தா, மதுரை ஹோட்டல் அதிபர் குமார் மற்றும் திருச்சியை சேர்ந்த சாரதாஸ் ஜவுளிகடை அதிபர் ஆகியோர் தங்களது தொழில்களை கைலாசாவில் தொடங்க முன்னுரிமை அளிக்க சன்னியாசிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். தனது நாட்டு பொருளாதார வணிக செயல்பாடுகளில் மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், தான் இறந்தபிறகு தனது சொத்தை மதுரை, திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு அளிக்க உயில் எழுதி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் நித்தியானந்தா கூறுகையில், நான் திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமரா வைத்து தரிசனம் செய்து வருகிறேன். ஆனால் சிசிடிவி சிக்னலை வைத்து கைலாசாவை கண்டுபிடிக்கலாம் என முயற்சிக்க வேண்டாம். அப்படி கண்டுபிடிக்க இயலாது. நான் உயிரிழந்த பின் தனது உடலை திருவண்ணாமலை மலையையும், மீனாட்சியம்மன் கோவிலையும் சுற்றிகொண்டுவந்த பின்னரே புதைக்க வேண்டும். கைலாசா நாட்டிற்கான அங்கீகாரம் கிடைத்தவுடன் நிச்சயமாக தொழில் துவங்க வேண்டுகோள் விடுத்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்,என்றார்.பாலியல் தொல்லை, ஆள்கடத்தல் வழக்குகளில் சிக்கியுள்ள நித்தியானந்தாவிற்கு எதிராக சர்வதேச விசாரணை ஆணையமான இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய வீடியோக்களை வெளியிடும் நித்தியானந்தா எங்கு இருக்கிறார்? கைலாசா என்ற நாடு உண்மையா ?என்பதை அவரை தேடும் குஜராத் போலீஸாரோ, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமோ இதுவரை தெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : districts ,Nithiyananda ,Thiruvannamalai ,Kanchipuram ,Madurai ,country ,Kailasa , Kailasa, Business, Thiruvannamalai, Madurai, Kanchipuram, Priority, Nithiyananda, Announcement
× RELATED தமிழ்நாட்டில் வெப்ப அலையை அடுத்து...