×

ஓட்டல்களில் பார்சல் உள்ளிட்ட வியாபாரங்களால் பிளாஸ்டிக் கேரிபேக் பயன்பாடு தமிழகத்தில் மீண்டும் அதிகரிப்பு: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை

சேலம்: ஓட்டல்களில் பார்சல் உள்ளிட்ட வியாபாரங்களால் தமிழகத்தில் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும்  அதிகரித்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்ததால் பிளாஸ்டிக் கேரிபேக்குகள் பயன்படுத்த அரசு தடைவிதித்தது. மேலும் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் கேரிபேக், டம்ளர் உள்ளிட்டவைகள் உற்பத்தி செய்து வரும் கம்பெனிகளை மூடி சீல் வைத்தனர். இந்த வகையில் பிளாஸ்டிக் கேரிபேக் பயன்பாடு 50 முதல் 60 சதவீதம் குறைந்தது.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதனால் 90 சதவீத சிறிய, பெரிய ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதிப்பதில்லை. அதற்கு பதில் முழு அளவில் பார்சல்கள் தான் வழங்கப்பட்டு வருகிறது. ஓட்டல்கள், ஸ்வீட் ஸ்டால்களில் தற்போது பார்சல் வழங்க அதிகளவில் பிளாஸ்டிக் கேரிபேக்குகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மீண்டும் குப்பைகளில் பிளாஸ்டிக் கேரிபேக்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல் சாக்கடை கால்வாய் மற்றும் நீர்நிலைகளில் பிளாஸ்டிக் அதிகளவில் தேக்கமடைந்துள்ளது. இதனால் நீர்நிலைகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை ெதரிவித்துள்ளனர்.

இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: தமிழகத்தில் நீர்நிலைகளை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை காக்கவும் கடந்த 2018ம் ஆண்டு பிளாஸ்டிக் கேரிபேக் பயன்படுத்த அரசு தடைவிதித்தது. இதன் எதிரொலியாக பிளாஸ்டிக் பயன்பாடு குறைய தொடங்கியது. இந்த நிலையில் ஊரடங்கு அமலால் ஓட்டல்களில் பார்சல் தான் அதிகளவில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக சாப்பாடு முதல் குழம்பு, பொரியல், மோர் உள்ளிட்டவைகள் வழங்க பிளாஸ்டிக் கேரிபேக் தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு பிளாஸ்டிக் கேரிபேக் தடை செய்தபோது, பொதுமக்களிடம் அமோக வரவேற்பு இருந்தது. பெரும்பாலான மக்கள் துணி பைக்கு மாறினர்.

பிளாஸ்டிக் தடைக்கு முன்பு எவ்வளவு உற்பத்தி இருந்ததோ, அதே அளவு உற்பத்தி மீண்டும் நடந்து வருகிறது. மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கேரிபேக் தாராளமாக கிடைக்கிறது. இதனால் நீர்நிலைகள், குப்பைகளில் பிளாஸ்டிக் கேரிபேக்குகள் அதிகளவில் குவிந்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : activists ,businesses ,parcels ,hotels ,Tamil Nadu , Hotels, parcels, businesses, plastics, Tamil Nadu, environmental activists
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...