நெல்லை அருகே குளத்தில் கிடந்த வெடி வைத்த மாம்பழத்தை தின்ற ஆடு தலை சிதறி பலி: வனத்துறையினர் விசாரணை

வீரவநல்லூர்: பத்தமடை அருகே குளத்தில் கிடந்த வெடி வைத்த மாம்பழத்தை தின்ற ஆடு தலை சிதறி பலியானது. இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் பத்தமடை மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் மாரியப்பன்(36), ஆடு மேய்க்கும் தொழிலாளி. சொந்தமாக 50க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் தினமும் பத்தமடை சிவானந்தா மருத்துவமனை சாலையில் மலையடிவார பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு மாலையில் வீடு திரும்புவார். நேற்று காலை வழக்கம்போல் காலை 8 மணிக்கு ஆடுகளுடன் வீட்டிலிருந்து புறப்பட்டு பத்தமடை-குரங்குமடம் சாலையில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.

11 மணியளவில் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியை அடுத்த இடைஞ்சான்குளத்தில் ஆடுகளை தண்ணீர் குடிக்க விட்டுள்ளார். அப்போது குளத்தில் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டதுடன் ஒரு ஆடு தலை சிதறி பலியானது. இதனால் அதிர்ச்சியடைந்த மாரியப்பன், மற்ற ஆடுகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று சக தொழிலாளரிடம் ஒப்படைத்துவிட்டு பலியான ஆட்டை சென்று பார்த்துள்ளார். அங்கு வெடி வைக்கப்பட்ட மாம்பழத்தை தின்ற  ஆடு, வாயில் வெடித்து தலை சிதறி பலியான தெரிய வந்தது. உடனடியாக அவர், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

அவர்கள், இதுகுறித்து பத்தமடை போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். களக்காடு முண்டந்துறை வன உயிரின காப்பாளரும், துணை இயக்குநருமான இளங்கோ தலைமையில் வனத்துறையினர் அங்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். வனவிலங்குகளை வேட்டையாடும் எண்ணத்தில் மாம்பழத்தில் வெடி வைக்கப்பட்டதா அல்லது தொழில் போட்டி காரணமாக வேறு நபர்கள் வெடி வைத்துள்ளனரா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் அதிகாலை, அந்தி சாயும் நேரத்தில் குளத்தில் வனத்துறையினர் தினமும் ரோந்து மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.

சம்பவம் பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், சமீபகாலமாக இதேபோல் பழங்களில் வெடி வைத்து அப்பகுதியில் இரை தேட வரும், மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளை மர்மகும்பல் வேட்டையாடுவதாக குற்றம்சாட்டினர். வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு இச்சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலப்புரம்  சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே உணவு தேடிச் சென்ற கர்ப்பிணி யானை, வெடி வைத்த அன்னாசி பழம் சாப்பிட்டு குட்டியுடன் உயிரிழந்தது

குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>