×

கொரோனா ஊரடங்கால் குமரியில் ரூ.5 கோடி மண்பாண்டம் வர்த்தகம் பாதிப்பு: தேங்கி கிடக்கும் பானை, சட்டிகள்

நாகர்கோவில்: கொரோனா தொற்று ஊரடங்கால் கேரளாவிற்கு மண்பாண்டங்கள் செல்லாததால், குமரி மாவட்டத்தில் ரூ.5 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் சுங்கான்கடை, தலக்குளம், பெருஞ்செல்வவிளை, கொறத்தியரை, தாழக்குடி, சண்டவிளை, தேரேகால்புதூர், கோட்டார், தாமரைகுளம், காப்பிக்காடு, கொல்லங்கோடு, புதுக்கடை, அருமனை, மாலைக்கோடு, குழித்துறை, குலசேகரம், புலியூர்குறிச்சி, முட்டைக்காடு ஆகிய பகுதிகளில் மண்பாண்டங்கள் செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் தயாராகும் மண்பாண்டங்களுக்கு கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மண்பாண்டம் தயாரிக்கும் பணியில் பல தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். மண்பாண்டங்கள் தயாரிக்க தேவையான மண் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.   

கடந்த காலங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்க தேவையான மண் எந்தவித தடையும் இன்றி கிடைத்து வந்தது. மேலும் பொதுமக்கள் அனைவரும் மண்ணில் தயாரிக்கும் பானை, சட்டி உள்ளிட்டவற்றை வாங்கி சமையலுக்கு பயன்படுத்தி  வந்தனர். இதனால் மண்பாண்ட தொழில் மிகவும் பிரமாண்டமாக நடந்து வந்தது. கோயில் விழா தொடங்கி அனைத்து விசேஷ நிகழ்ச்சிகளிலும் மண்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டது. பின்னர் நாகரிகம் என்ற பெயரில் சில்வர், அலுமினிய பாத்திரங்கள் மக்களை ஆக்கிரமித்தது. இதனால் குமரி மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் மண்ணால் செய்யப்பட்ட மண்பானை, சட்டிகளை மறந்தனர். இருப்பினும் கேரளாவில் சமையல் செய்யும் பாத்திரங்களில் மண்பாண்டங்கள் அதிக அளவு இடம்பிடித்து வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மண்பாண்டங்கள் கேரளாவிற்கு அதிக அளவு செல்கிறது.

மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் மண்பாண்டங்களை விற்பனை செய்வதற்கு என்று குமரி மாவட்டத்தில் இருந்து பல தொழிலாளிகள் கேரளாவிற்கு செல்கிறார்கள். அவர்கள் மாதகணக்கில் அங்கு தங்கியிருந்து மண்பாண்டங்களை விற்பனை செய்துவிட்டு, ஊருக்கு திரும்புவது வழக்கம். கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து கேரளாவில் பானை விற்பனை செய்யும் தொழிலாளர்கள் குமரி மாவட்டத்திற்கு திரும்பினர். இதனால் இங்கிருந்து மண்பாண்டங்கள் கேரளாவிற்கு செல்லாமல் குமரி மாவட்டத்திலேயே தேக்கம் அடைந்தது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இது குறித்து சுங்கான்கடை மண்பாண்ட கூட்டுறவு சங்க தலைவர் ஹரிகரன் கூறியதாவது: நாங்கள் தயாரிக்கும் மண்ணால் ஆன அனைத்து பொருட்களும் கேரளாவிற்கு சென்றால்தான் எங்களது வாழ்வாதாரம் எந்தவித பாதிப்பும் இன்றி செல்லும். ஆனால் தற்போதுள்ள முடக்கத்தால் மொத்தத்தில் மண்பாண்ட தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகவுள்ளது. சுங்கான்கடை கூட்டுறவு சங்கத்தில் உள்ளவர்களுக்கு வருடம் தோறும் 250 யூனிட் வண்டல் மண் குளங்களில் எடுக்க அரசு அனுமதி வழங்கும். இந்த வருடத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளோம். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை.

சுங்கான்கடை, பெருஞ்செல்வவிளை, தாழக்குடி, தேரேகால்புதூர் பகுதியில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவு மண்பாண்டங்கள் செல்லும். கேரள மாநிலத்தில் உள்ள கோயில்களில் பொங்கல் வழிபாடு என்பது பிரமாண்டமாக நடக்கும். அங்கு பொங்கலிடும் மண்பானைகள் இங்கு தயாரிக்கப்பட்டு அதிக அளவு அங்கு செல்லும். தற்போது கொரோனா ஊரடங்கு காரணத்தாலும், கோயில் திருவிழாக்கள் நடக்காததாலும் பொங்கல் பானைகள் உள்ளிட்ட அனைத்து பானைகளும் கேரளாவிற்கு செல்லவில்லை. தற்போது சுங்கான்கடை பகுதியில் மட்டும் ரூ.30 லட்சம் மதிப்பிலான பானைகள் தேக்கம் அடைந்துள்ளது என்றார்.   

குமரி மாவட்ட மண்பாண்ட குடிசை தொழிலாளர் நலசங்க தலைவர் சுகுமாறன் கூறியதாவது:
குமரி மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட தொழிலை நம்பி இருந்தனர். பின்னர் மண் கிடைப்பதில் சிரமம் உள்பட பல்வேறு இடர்பாடுகளால் இந்த தொழிலை நம்பி இருந்த பலர் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். இதனால் சுங்கான்கடை பகுதியில் 260 குடும்பங்கள் செய்து வந்த மண்டபாண்ட தொழில் தற்போது 55 குடும்பங்களாக சுருங்கியுள்ளது. சுமார் 420 பேர் நலவாரியத்தில் உள்ளனர். அவர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வீதம் கிடைத்துள்ளது. ஆனால் தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் அனைவருக்கும் கிடைக்கவில்லை.

கேரளாவிற்கு மண்பாண்டம் சென்றால் மட்டுமே இங்குள்ள தொழிலாளிகளுக்கு வருமானம் கிடைக்கும். இல்லை என்றால் வருமானம் இன்றி, கடனில் மூழ்கும் நிலைதான் எற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த கொரோனா காலகட்டத்தில் சுமார் ரூ.5 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அருமனை, குலசேகரம் உள்பட பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படும் மண்பாண்டங்கள் சந்தைகளுக்கு விற்பனைக்கு வரும். தற்போது சந்தைகளும் மூடப்பட்டுள்ளதால், அந்த விற்பனையும் இல்லாமல் மண்பாண்ட தொழிலாளர்கள் நலிவடைந்துள்ளனர். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

* வாகனங்களில் விற்பனை
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் மண்பாண்டங்களை விற்பனை செய்வதற்கு என்று குமரி மாவட்டத்தில் இருந்து 100க்கணக்கான தொழிலாளர்கள் செல்வது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கால் குமரி மாவட்டத்தில் அனைத்து தொழிலாளர்களும் முடங்கியுள்ளனர். கேரளாவிற்கு மண்பாண்டங்களை கொண்டு செல்லும் வியாபாரிகள் தற்போது குமரி மாவட்டத்தில் கிராமம் கிராமமாக வாகனங்களில் மண்பாண்டங்களை கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

* ஒரு யூனிட் ரூ.5500
குளங்களில் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கும்போது ஒரு லோடு வண்டல் மண் வந்து சேருவதற்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3500 வரை ஆகிறது. ஆனால் பாஸ் இல்லாமல் வண்டல் மண் வேண்டும் என்றால் ரூ.5500 வரை கொடுக்க வேண்டியுள்ளது. இதனை கொண்டு மண்பாண்டம் தயாரித்து விற்பனை செய்யும்போது லாபம் கிடைப்பது கஷ்டம். அதனை தவிர தொழிலாளிகளை வைத்து வேலை செய்யும் போதும் லாபம் கிடைப்பது இல்லை. தொழில் மட்டும் நடந்து வரும் என தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

* கலைபொருட்கள் விற்பனை இல்லை
மண்ணால் தயாரிக்கப்பட்ட மண்பானைகள் ஜாடிகள், தண்ணீர் குவளைகள், ஐஸ்கிரீம் கோப்பைகள், வாட்டர் பாட்டில்கள், மண்பாண்ட பிரிட்ஜ், சாம்பிராணி ஜாடி உள்பட பல்வேறு பொருட்கள் விதவிதமாக தயார் செய்து சுங்கான்கடை உள்பட குமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் சாலையோரம் கடைகள் அமைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் ஊரடங்கால் வெளிமாநில, மாவட்ட சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் இந்த பொருட்களின் விற்பனை சுத்தமாக இல்லை என வியாபாரிகள் கூறினர்.

Tags : Corona Uradangal Kumari , Corona Uradangal, Kumari, Rs 5 crore paving, trade damage, stagnant, pot, pans
× RELATED கொரோனா ஊரடங்கால் குமரியில் மாம்பழ...