×

கொரோனா ஊரடங்கால் கருத்தடை விஷயத்தில் அலட்சியம்: இந்தியாவில் 10 லட்சம் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு?

* 6.5 லட்சம் திட்டமிடாத கர்ப்பம், 2,600 கர்ப்பிணிகள் மரணம்
* லண்டன் அமைப்பு நடத்திய ஆய்வில் பரபரப்பு தகவல்கள்

லண்டன்: கொரோனா ஊரடங்கால் கருத்தடை விஷயத்தில் பல நாடுகள் அலட்சியம் காட்டி வரும் நிலையில், இந்தியாவில் 10 லட்சம் பாதுகாப்பற்ற கருக்கலைப்பும், 6.5 லட்சம் திட்டமிடாத கர்ப்பமும், 2,600 கர்ப்பிணி மரணமும் ஏற்படும் என லண்டனில் உள்ள அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் பாதிப்பால் பலரும் குடும்பத்துடன் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அதனால், திட்டமிடப்படாத, தேவையற்ற கருத்தரித்தல் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐ.நா-வின் மக்கள் தொகை நிதி மையம் கவலை தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஐ.நா வெளியிட்ட புள்ளி விபரத்தின்படி, ‘கொரோனா ஊரடங்கு பெண்களை மனதளவிலும், உடலளவிலும் அதிகமாக பாதித்துள்ளது. தற்போது திட்டமிடாத கருத்தரித்தல் மேலும் அவர்களை பலவீனமாக்கியுள்ளது.

கொரோனா ஊரடங்கால் கருத்தடை பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியுள்ளது. இதனால் பலரும் ஆணுறை, கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தவில்லை. தொடர்ந்து 6 மாதங்கள் ஊரடங்கு நீடித்தால் 114 குறைந்த மற்றும் நடுத்தர நாடுகளில் 47 மில்லியன் (7 கோடி பேர்) பெண்கள் கருத்தடை பொருட்களை வாங்க முடியாத நிலை உண்டாகும். 70 லட்சம் பெண்கள் திட்டமிடாத கருத்தரித்தலால் பாதிக்கப்படுவர். அதனால் பெண்கள் கருக்கலைப்பு, கரு பாதிப்பு போன்றவற்றை அதிக அளவில் சந்திப்பார்கள். பாலியல் தொழில் விடுதிகளும் மூடப்பட்டுள்ளதால் பாலியல் வன்முறைகளும் 15 மில்லியனாக அதிகரிக்கும்’ என்று கூறியுள்ளது. இதுகுறித்து, உலகளாவிய சுகாதாரக் கொள்கை நிபுணர் டாக்டர் கிளேர் வென்ஹாம் கூறுகையில், ‘கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு பிறகு குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்காது.

ஏனெனில் தம்பதிகள் தங்கள் பொருளாதா நெருக்கடி குறித்து அதிகம் கவலைப்படுகின்றனர். பணக்கார நாடுகளில் உள்ள தம்பதிகள், தங்கள் பெற்றோரை பொருளாதார நெருக்கடியால் கவனிப்பதை தவிர்த்து வருகின்றனர். 2014ம் ஆண்டில் ‘எபோலா’ வைரஸ் பரவல் நெருக்கடியின் போது, மேற்கு ஆப்பிரிக்காவிலும் இதேபோன்ற ஒரு ெநருக்கடி ஏற்பட்டது. அப்போது 15 லட்சம் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு மற்றும் 3,000க்கும் மேற்பட்ட கர்ப்பிணி இறப்புகள் நடந்துள்ளன.
கொரோனா சுகாதார சேவைகளுக்கு நாடுகள் முக்கியத்துவம் தருவதால், இனப்பெருக்க சுகாதாரத்துக்கான கருத்தடை சேவை குறைந்துவிட்டது. அதனால், கருத்தடை குறித்து மக்கள் அலட்சியம் செய்து வருகின்றனர். அமெரிக்காவில் பல மாநிலங்களில் கருக்கலைப்பை ஒரு அத்தியாவசிய மருத்துவ சேவையாக பின்பற்றி வந்தனர்.

ஆனால், இப்போது கருக்கலைப்பை பற்றி அவர்கள் அக்கறை கொள்ளவில்லை.  பெரும்பாலான நாடுகளில் பெண்கள் கருத்தடை செய்வதற்கான அணுகுமுறையை கையாள சிரமப்படுகிறார்கள். இந்த விஷயத்தில் இந்தியா ேபான்ற நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன’ என்றார். ேமலும், லண்டனில் உள்ள ‘இப்சோஸ் மோரி’ என்ற தன்னார்வ நிறுவனம் மேற்கொண்ட ஒரு கணக்கெடுப்பில், ‘இந்தியாவில் கருக்கலைப்பு செய்ய விரும்பும் பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர், தங்கள் உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டு உள்ளதாக கூறுகின்றனர். இதனால், 10 லட்சம் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள், 6.5 லட்சம் திட்டமிடப்படாத கர்ப்பங்கள் மற்றும் 2,600 கர்ப்பிணி பெண்கள் இறப்புகளை இந்தியா எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி இன்றைய வரை 150 நாட்கள் (5 மாதங்கள்) முடிந்துவிட்ட நிலையில், ஆரம்ப சுகாதார நிலைய கருத்தடை மையங்கள் மூடிக் கிடப்பதால் பெண்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

கர்ப்பத்தை முறிக்க உடைந்த கண்ணாடி
ஐ.நா-வின் மக்கள் தொகை நிதி மையம் குறிப்பிட்டதை நிரூபிக்கும்  வகையில், மேரி ஸ்டோப்ஸ் இன்டர்நேஷனல் நடத்திய ஆய்வில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், ‘கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் 20 லட்சம் பெண்கள் கருத்தடை சாதனங்களை பெறமுடியவில்லை. அதனால், அதிகளவில் கருக்கலைப்பு நடந்துள்ளது. 19 லட்சம் பெண்கள் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை கருத்தடை சாதனங்களை பயன்படுத்தினர். கென்யாவில் சில பெண்கள் கர்ப்பத்தை முறித்துக் கொள்ள, உடைந்த கண்ணாடியைப் பயன்படுத்தி உள்ளனர். கென்யாவில் இளம்பெண்களின் கர்ப்பம் அதிகமாக பதிவாகியுள்ளது. கருத்தடை சாதனங்களை பயன்படுத்தாததால் கடந்த 6 மாதத்தில் 9 லட்சம் திட்டமிடப்படாத கர்ப்பங்கள் நடந்துள்ளன. இதனால், குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை உலகளவில் அதிகரிக்கும்’  என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Corona ,India , Corona curfew, contraception, India, abortion?
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...