×

நகராட்சியில் புகார் அளித்தும் பயனில்லை சாலையின் நடுவே மரண பள்ளம்

*அவதியில் பொதுமக்கள்

காரைக்குடி : காரைக்குடி அழகப்பாபுரம் விநாயகர் தெரு பகுதியில் உள்ள சாலை முழுவதும் படுகுழியாக உள்ளதால், மழைநீர் குளம் போல் தேங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. காரைக்குடி 19வது வார்டுக்கு உட்பட்ட அழகப்பாபுரம் விநாயகர்தெரு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாலை போடப்பட்ட நிலையில், தற்போது சாலை முழுவதும் பெயர்ந்து பள்ளமும், படுகுழியுமாக காணப்படுகிறது. சாலை பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இச்சாலை பொன்நகர், புதுவயல், மாத்தூர், கண்டனூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலையாக உள்ளதால் தினமும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. மழைநீர் பள்ளங்களில் தேங்கி கிடப்பதால் இரவு நேரங்களில் டூவீலர்களில் செல்வோர் விழுவது வாடிக்கையாகி வருகிறது. புதிய சாலை அமைக்க வேண்டும் அல்லது தற்போது அவசர தேவை கருதி பேட்ஜ் ஒர்க்காவது பார்க்க வேண்டும் என பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் கண்டுகொள்ளாத நிலை உள்ளது.

இதுகுறித்து பிரகாஷ் கூறுகையில், மக்களின் அடிப்படை தேவையை கூட பூர்த்தி செய்யாமல் நகராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது. சாலை பள்ளங்களில் மக்கள் விழுந்து பலத்த காயமடைந்து வருகின்றனர். சாலை சரி செய்யா விட்டால் மக்களை திரட்டி நற்றுநடும் போராட்டம் நடத்தப்படும் என்றார். அப்பகுதி மக்கள் கூறுகையில், சாலை பள்ளங்களில் தேங்கி கிடக்கும் தண்ணீரால் கொசு பிரச்னை அதிகரிப்பதோடு பல்வேறு தொற்றுநோய் பரவும் நிலை உருவாகி உள்ளது.

தவிர மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மழை காலங்களில் பாம்பு உள்பட பல்வேறு விஷ பூச்சிகளும் புகுந்து விடுகின்றன. பாதாளசாக்கடை திட்டத்தை காரணம் காட்டி சாலை அமைக்க மறுக்கின்றனர். பள்ளங்களில் பேட்ஜ் ஒர்க்காவது பார்க்க வேண்டும் என்றனர்.

Tags : municipality ,road ,Roads ,Karaikudi , Karaikudi,roads, damaged, karaikudi muncipality
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு