×

வலங்கைமான் சந்திரசேகரபுரம் பகுதி குடமுருட்டி ஆற்றில் 2வது முறையாக மணல் மூட்டைகளால் தடுப்பு அமைப்பு

*சம்பா சாகுபடியாவது கை கொடுக்குமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு

வலங்கைமான் : வலங்கைமான் அடுத்த சந்திரசேகரபுரம் பகுதியில் குடமுருட்டி ஆற்றின் நடுவே விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறையால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தடுப்பு மதகு அமைக்கப்பட்டது. அதனையடுத்து தடுப்பு மதகின் அருகில் உள்ள சுமார் 300 ஏக்கர் பாசன வசதி பெறக்கூடிய பூண்டி வாய்க்கால், சுமார் 900 ஏக்கர் பாசன வசதி பெறக்கூடிய சந்தன வாய்க்கால் மற்றும் சுமார் 800 ஏக்கர் பாசன வசதி பெறக்கூடிய தில்லையம்பூர் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்கள் மூலம் மேற்கண்ட நிலபரப்புகள் போதிய பாசன வசதி பெற்று வந்தது.

இந்நிலையில் குடமுருட்டி ஆற்றின் நடுவே பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணையின் தெற்குப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டது. அதனால் குடமுருட்டி ஆற்றில் தண்ணீர் வரும்போது தடுப்பின் அருகில் உள்ள பூண்டிவாய்க்கால், தில்லையம்பூர் வாய்க்கால், சந்தன வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களில் பாசனத்திற்கு தண்ணீர் போதுமானதாக செல்லவில்லை. அதன் காரணமாக சுமார் இரண்டாயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

எனவே இப்பகுதி விவசாயிகளின் நலன் கருதி காலதாமதம் செய்யாமல் குடமுருட்டி ஆற்றில் உடைந்த தடுப்பணை அருகே தண்ணீர் தேங்கி பாசனத்திற்கு செல்லும் வகையில் மரம் மற்றும் மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிகமாக தடுப்பினை ஏற்படுத்தவேண்டும் என விவசாயிகள் பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக தினகரனில் கடந்த மாதம் முப்பதாம் தேதி செய்தி வெளியானது. அதனையடுத்து பொதுப்பணித்துறை மரம் மற்றும் மணல் மூட்டைகளை வைத்து தற்காலிகமாக தடுப்புகளை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் குடமுருட்டி ஆற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆற்றில் தண்ணீர் வரும் வரை கம்பீரமாக மணல் மூட்டைகளை கொண்டு அமைத்த தடுப்பு காட்சியளித்த நிலையில் தண்ணீர் வந்தவுடன் தற்காலிக தடுப்பு நிலை குலைந்து போனது. அதன்காரணமாக தற்போது மேற்கண்ட பாசன வாய்க்கால்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் செல்லவில்லை. பொதுப்பணித்துறையால் தற்காலிகமாக ஏற்படுத்திய தடுப்பு உரிய பலனை அளிக்காமல் உடைந்து போனதால் ததற்காலிக தடுப்பணையை போன்று விவசாயிகளின் மகிழ்ச்சியும் நிலைக்காமல் போனது.

அதனையடுத்து பொதுப்பணித்துறையால் கடந்த சில நாடகளாக குடமுருட்டி ஆற்றில் உடைந்த தடுப்பணை அருகே தண்ணீர் தேங்கி பாசனத்திற்கு செல்லும் வகையில் மரம் மற்றும் மணல் மூட்டைகள், கருங்கல் ஆகியவற்றை கொண்டு தற்காலிகமாக தடுப்பினை மீண்டும் ஏற்படுத்தி வருகின்றனர். மேட்டூர் அணை திறக்கப்பட்டு இரண்டு மாதங்களை கடந்த நிலையில் மேற்கண்ட தலைப்பு வாய்க்கால்களில் கூட பாசனத்திற்கு தண்ணீர் செல்லவில்லை.அதனால் சந்திரசேகரபுரம், ஆதிச்சமங்கலம், வலங்கைமான், வளையமாபுரம், தில்லையம்பூர் உள்ளிட்ட பல கிரமங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் தற்போது சம்பா விதைவிடும் பணியினையும் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.

பொதுப்பணித்துறையால் நிரந்தர படுக்கை அணை உடைந்த நிலையில் சந்திரசேகரபுரம் பகுதியில் குடமுருட்டி ஆற்றில் இரண்டாவது முறையாக தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி ஏற்படுத்திய தடுப்பாவது உரிய பலனை அளிக்குமா என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags : area ,Kudamurutty ,Valangaiman Chandrasekarapuram ,Valankaimaan Temporavary Bridge ,river ,officals , Valankaimaan ,Temporavary Bridge ,official,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...