×

முதல்வரை சந்திக்க வந்த திமுக எம்பி தடுத்து நிறுத்தம்: சாலையில் அமர்ந்து மறியல்; அதிமுகவினர் எதிர் கோஷம்

தர்மபுரி:  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, தர்மபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார், எட்டு வழிச்சாலையை தடுத்து நிறுத்த வேண்டும், கிடப்பில் உள்ள தர்மபுரி நீர்ப்பாசன திட்டப்பணியை செயல்படுத்த வேண்டும். இதற்காக, முதல்வரை நேரில் சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று கூறி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார். அவரை 100 மீட்டர் தொலைவிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். உள்ளே செல்ல வேண்டும் என்றால், கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என சான்றிதழ் பெற்றுள்ளீர்களா என போலீசார் கேட்டனர்.

அப்போது அதற்கான அரசாணை உள்ளதா என போலீசாரிடம் எம்பி திருப்பிக்கேட்டார். அப்போது போலீசாருக்கும், எம்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு, தர்மபுரி- சேலம் சாலையில் எம்பி செந்தில்குமார் மற்றும் திமுகவினர் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அகற்ற முயன்றனர். ஆனால் தொடர்ந்து எம்பி கோஷம் எழுப்பியபடி மறியலை தொடர்ந்தார். இதைக்கண்ட அதிமுகவினர் அங்கு வந்து, திமுக எம்பிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். பின்னர், எம்பி போராட்டத்தை கைவிட்டு, மனுவை நிருபர்களிடம் கொடுத்து விட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : time ,DMK ,road , Meet first, DMK MP, stop, road, sit-in, AIADMK, anti-slogan
× RELATED சென்னையில் மிதவை உணவக கப்பல் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது!!