×

உணவு, மருத்துவம், வீட்டு வாடகைக்கு என அதிக வட்டிக்கு கடன் வாங்கும் தொழிலாளர்கள்: எதிர் காலத்தில் பட்டினிச்சாவுகள் ஏற்படும் அபாயம்

சேலம்: ஊரடங்கால் வேலையிழந்த தொழிலாளர்கள் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதால் எதிர்க்காலத்தில் பட்டினிச்சாவுகள் அதிகரிக்கும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  கொரோனா பரவியதையடுத்து கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் முழுவதுமாக மூடப்பட்டது. அதன்பிறகு,பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் காரணமாக ஒரு சில தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும், இன்னும் பல தொழிற்சாலைகள் செயல்படவில்லை. குறிப்பாக சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்களில் ஈடுபட்ட பல லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். வருவாயிழந்த குடும்பங்கள் அடிப்படை தேவைகளான உணவுப்பொருட்கள்,மருத்துவம்,வீட்டு வாடகை போன்ற செலவுக்காக அதிக வட்டிக்கு கடன் வாங்கி வருகின்றனர். இவ்வாறு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள சேலம் காரிப்பட்டி கிராம அமைப்பு மற்றும் கல்வி வளர்ச்சி பொறுப்பாளர் மோகன்குமார் கூறியதாவது: தமிழகத்தில் கார் ெதாழிற்சாலை,பஸ் பாடிகட்டுதல், நூல் மில், சேகோ ஆலைகள், இரும்புக்கம்பி கம்பெனிகள்,கட்டிடம் கட்டுதல் என நூற்றுக்கணக்கான ெதாழில்கள் உள்ளன.இந்த தொழில்களில் கோடிக்கணக்கான மக்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா வைரஸ்,கூலி தொழிலாளர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. இன்னும் பாதி தொழிற்சாலைகளுக்கு மேல் இயங்காமல் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர்.

மேலும் 3 ஷிப்ட முறையில் இயங்கிய தொழிற்சாலைகளில் கூட, தற்போது 2 ஷிப்ட முறையை கொண்டு வந்துள்ளனர்.அதிலும் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள்தான் வேலை கிடைக்கிறது. அவர்களுக்கு முழுமையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. கட்டுமான பணிகள்  வெகுவாக பாதித்துள்ளது.வேலைவாய்ப்பை இழந்தவர்கள் வருமானம் இல்லாமல் அன்றாடம் குடும்பம் நடத்தவே கஷ்டப்பட்டு வருகின்றனர்.
வருவாயிழந்த தொழிலாளர்கள் அடிப்படை தேவைக்காக அதிக வட்டிக்கு கடன் வாங்குகின்றனர். அந்த கடனை அடைக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.இதே நிலை தொடர்ந்தால் எதிர்வரும் மாதங்களில் பட்டினிச்சாவுகள் அதிகரிக்கும்.

இதன் விளைவாக ஆட்கள் கடத்தல்,கொத்தடிமை தொழிலாளர் முறை, குழந்தை திருமணம்,குழந்தை தொழிலாளர் முறை போன்றவைகள் அதிகரிக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வறுமை காரணமாக வீட்டில் உள்ள பெண்கள்,குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. அவர்கள் போதிய உணவு இல்லாமல் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெளி நாடுகளைப்போல் இந்தியாவிலும் வருவாயிழந்த குடும்பங்களுக்கு மாதந்தோறும் ₹6 ஆயிரம் பண உதவி செய்ய வேண்டும்.இதன் மூலம் பல கோடி குடும்பங்கள் பட்டினியிலிருந்து காப்பாற்றப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

பெண்கள், குழந்தைகள் உடல் ரீதியாக பாதிப்பு
‘‘வேலைவாய்ப்பு இழந்த  பெரும்பாலானோர்,மாதக்கணக்கில் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். குடும்பம் நடத்த பணம் இல்லாததால் ஆண்கள்,பெண்களை துன்புறுத்தி வருவதாகவும், அடிக்கடி குடும்பச்சண்டை ஏற்பட்டு வருவதாகவும் புகார்கள் தொடர்கிறது. இதனால் பல இடங்களில் தற்கொலை சம்பவங்களும் நடந்து வருகிறது.பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் குழந்தைகள் பல மணிநேரம் வீடுகளிலேயே பொழுதை கழிக்கின்றனர்.இதனால் அவர்களுக்கு உடல்ரீதியாக பாதிப்பு ஏற்படுகிறது. பல வீடுகளில் குழந்தைகளை துன்புறுத்தும் சம்பவங்களும் நடந்து வருகிறது,’’என்பதும் ஆய்வாளர்களின் வேதனை.


Tags : Food, medicine, rent, interest, labor, starvation in
× RELATED நாகர்கோவிலில் பஸ் நிலையங்கள், ரயில்...