×

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு குடோனில் பற்றி எரிந்த தீ: ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்துச் சிதறியது..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறி சேதமடைந்துவிட்டன. சாத்தூர் அருகே வள்ளிமில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் அருகே கோவில்பட்டியை சேர்ந்த வெற்றிவேல் என்பவருக்கு சொந்தமாக சுஜா டிரேடர்ஸ் என்ற பட்டாசு குடோன் வைத்திருந்தார். இந்த பட்டாசு கடையானது சிறப்பு பண்டிகை காலங்களில் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்ததாகவும், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களாக பட்டாசு குடோன் திறக்கப்படாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றிரவு அந்த குடோனில் திடீரென தீப்பற்றியது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீ பரவியதால் அப்பகுதியே பட்டாசு சத்தத்தில் அதிர்ந்தது. இதனால் குடோனில் வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.  இதனை தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் மற்றும் கோவில்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் 15க்கும் அதிகமானோர் தீயினை கட்டுப்படுத்த போராடினர். பட்டாசுகள் இடைவெளியின்றி வெடித்து சிதறியதால் நெருப்பினை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. எனினும் 2 மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமானது. மின்கசிவு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Sattur ,Virudhunagar district , Fire on firecracker godown near Sattur in Virudhunagar district: Rs. 3 lakh worth of firecrackers exploded .. !!
× RELATED காரில் திடீர் தீவிபத்து