×

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்

*உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் கோரிக்கை

புதுடெல்லி : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று  நடைபெற இருக்கும் தண்டனை விசாரணையை தள்ளிவைக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்  பிரசாந்த் பூஷண் கோரியுள்ளார். மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண், கடந்த ஜூன் 27ம் தேதி  உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் டிவிட்டரில்  கருத்து பதிவிட்டார். அடுத்ததாக, பா.ஜ தலைவருடன் இணைந்து  ₹50 லட்சம் மதிப்புள்ள மோட்டார்  சைக்கிளில் பயணம் செய்தது தொடர்பாக ஜூலை 22ம் தேதி மீண்டும் ஒரு டிவிட்டர் பதிவை பதிவிட்டார். அதில், ‘கொரோனா பாதுகாப்பு நடைமுறை விதிகளை மீறி, முகக்கவசம் மற்றும் கையுறை அணியாமலும், சமூக இடைவெளியை  பின்பற்றாமலும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே செயல்பட்டுள்ளார். இது ஏற்க  கூடிய ஒன்றல்ல. மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான  வழக்குகளையும் அவர் சரியாக கையாளவில்லை,’ என குற்றம்சாட்டினார்.

பூஷணின் இந்த பதிவுகள், நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் இருப்பதாக  குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, அவர் மீது  தாமாக  முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 14ம் தேதி அளித்த தீர்ப்பில். பிரசாந்த்  பூஷணை குற்றவாளியாக அறிவித்தது. அவருக்கான தண்டனையை முடிவு செய்வதற்கான  விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதி நடத்தப்படும் எனவும் தெரிவித்தது. அதன்படி, இந்த விசாரணை இன்று நடத்தப்பட்டு, அவருக்கு தண்டனை அளிக்கப்பட உள்ளது.    இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பூஷண் நேற்று தாக்கல் செய்த மனுவில், ‘ எனக்கு அளிக்கப்படும் தண்டனையை முடிவு செய்வதற்காக, நாளை (இன்று) நடத்தப்பட உள்ள விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்.  மேலும், இது தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரியும் மனு  தாக்கல் செய்ய உள்ளேன்,’ என குறிப்பிட்டுள்ளார். இன்றையை  விசாரணையில், பூஷணின் இந்த கோரிக்கையை நீதிமன்றம்  ஏற்குமா, நிராகரிக்குமா? என்பது தெரியவரும்.

Tags : court ,Prashant Bhushan ,sentencing hearing ,Supreme Court ,hearing , Supreme Court, Prashant Bhushan, contempt case, Prashant Bhushan contempt case, chief justice of India, prashant bhushan tweet
× RELATED ஒப்புகைச்சீட்டு வழக்கு: தீர்ப்பு தேதி...