×

பீகாரில் திட்டமிட்டபடி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்துக்கு 3 பேர் மட்டுமே அனுமதி

*தேர்தல் ஆணையம் கெடுபிடி

புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவை தேர்தலை திட்டமிடபடி நடத்த முடிவு செய்துள்ள தேர்தல் ஆணையம், பிரசாரத்துக்கு 3 பேருக்கு மேல்  செல்லக்கூடாது என்பது உட்பட பல்வேறு கட்டுபாடுகளை விதிக்க உள்ளது.  நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றினால், பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட இருந்த இடைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, பீகார் மாநிலத்தின் சட்டப்பேரவை காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிகிறது. இங்கு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இத்தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்ற கருத்து பரவிய நிலையில், தேர்தலை குறிப்பிட்ட நேரத்தில் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.இது பற்றி அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டது.இதற்கிடையே, தேர்தலுக்கான புதிய வழிகாட்டுதல் விதிகள்  மூன்று நாட்களில் தயாரிக்கப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்நிலையில், புதிய வழிகாட்டுதல் விதிகளை தேர்தல் ஆணையம் இந்த வாரத்தில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் முழுவதும் நேரடி பிரசாரமாகவோ, காணொலி பிரசாரமாகவோ இல்லாமல் இரண்டும் கலந்த பிரசாரம் மேற்கொள்ள கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: கொரோனா தொற்று குறையாத நிலையில், கூட்டத்தை குறைக்கும் வகையில், வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளருடன் இரண்டு பேர் மட்டுமே செல்லவும், வீடு வீடாக வாக்கு சேகரிக்க 3 பேர் மட்டுமே செல்லவும் அனுமதி வழங்கப்பட உள்ளது. மேலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்துள்ளது. சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூடுதலாக 34,000 வாக்குச்சாவடி

ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட இருப்பதால், பீகார் தேர்தலுக்கு கூடுதலாக 34,000  வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இது வழக்கத்தை விட 45 சதவீதம்  கூடுதலாகும். இத்துடன் சேர்த்து மொத்தம் ஒரு லட்சத்து 6 ஆயிரம்  வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

Tags : legislature ,Bihar ,Elections ,persons ,Campaign ,Election commission , Election commission, Bihar Elections, Nitish Kumar
× RELATED நாடு முழுவதும் 2ம் கட்ட மக்களவைத்...