×

இறக்குமதி பொருட்களை விடுவிக்க லஞ்சம் சென்னை சுங்கத்துறை மதிப்பீட்டாளர் உள்பட 4 பேர் கைது: சிபிஐ அதிரடி நடவடிக்கை

சென்னை: வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விடுவிக்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் சென்னை சுங்கத்துறை மதிப்பீட்டாளர் உள்பட 4 பேரை சிபிஐ அதிரடியாக கைது செய்தது. சென்னை சுங்கதுறையில் மதிப்பீட்டாளராக கடந்த மாதம் முதல் பணியாற்றி வருபவர் சவுரவ் சர்மா. இவர் இதற்கு முன் டெல்லியில் துக்ளபாத்தில் சுங்கத்துறை கன்டெய்னர் அலுவலகத்தில் பொருட்கள் மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தார். அப்போது, சுங்கத்துறை அலுவலகத்தில் மதிப்பீட்டுக்காக வரும் இறக்குமதி பொருட்களை மதிப்பீடு செய்வதற்கு லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், புரோக்கர் ஒருவர், சுங்கத்துறை அலுவலக ஏஜென்ட் ஆகியோர் உதவியுடன் தனி நபர் ஒருவரின் இறக்குமதி பொருட்களுக்கு ரூ.7 லட்சம் லஞூசமாக வாங்கியது தெரியவந்தது.

இதையடுத்து சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் உள்ள மதிப்பீட்டாளர் அலுவலகம், சவுரவ் சர்மா ஏற்கனவே பணியாற்றிய டெல்லி அலுவலகம், டெல்லி, நொய்டா, சென்னையில் உள்ள அவரது வீடுகள் ஆகிய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் ரூ.1 கோடி ரொக்கம் மற்றும் ஏராளமான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர். இதையடுத்து, சவுரவ் சர்மா, டெல்லி சுங்க அலுவலக ஏஜென்ட் நீரஜ், புரோக்கர் ராம் கிருஷ்ணன், சம்மந்தப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்த கிஷோர்குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்த சிபிஐ அதிகாரிகள் ஊழல் தடுப்பு சட்டம், கூட்டுச்சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Tags : customs appraiser ,CBI ,Chennai , Imported goods, bribe to release, Chennai Customs, appraiser, 4 arrested, CBI
× RELATED “இவர்களின் அமைதி ஆபத்தானது”: பிரதமர்...