×

மனிதர்கள் கிட்ட மட்டுமில்லை.. விலங்குகள் கிட்டையும் உஷாரய்யா உஷார்.. ரூ.25,000 ரொக்கம், நகையை கொள்ளையடித்த குரங்கு: மூதாட்டி கண்ணீர்

திருவையாறு: தஞ்சை அருகே மூதாட்டியின் குடிசை வீட்டுக்குள் புகுந்த குரங்கு, ரூ.25,000 ரொக்கம், அரை பவுன் தோடு, அரை மோதிரம் இருந்த பையை தூக்கிச்சென்றது. தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா வீரமாங்குடி குதிரை கோயில் தெருவை சேர்ந்த கணேசன் மனைவி சாரதாம்பாள்(70). கணவர் இறந்து விட்டதால், குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டின் கதவு தட்டியால் ஆனது. நேற்று மதியம் சாரதாம்பாள் வீட்டுக்கு எதிரில் உள்ள பொது குழாயில் துணி துவைத்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த சுமார் 10 குரங்குகள் லேசாக திறந்திருந்த தட்டிக்கதவை தள்ளிக்கொண்டு சாரதாம்பாளின் வீட்டுக்குள் புகுந்தன. அங்கிருந்த அரிசி மற்றும் உணவு பொருட்களை தின்றும், கொட்டியும் வீணடித்தன.

இதில் ஒரு குரங்கு சாரதாம்பாள் வீட்டில் இருந்த ஒரு பையை எடுத்துக்கொண்டு வெளியே ஓடியது. அந்த பையில் இருந்த அரிசி தெருவில் கொட்டியது. இதைப்பார்த்து சாரதாம்பாள் கூச்சலிட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் பையுடன் சென்ற குரங்கை பிடிக்க முயன்றனர். குரங்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தின் மேல் ஏறி நின்று, விரட்டியவர்களை மிரட்டலுடன் பார்த்தது. ஆனாலும் பையை கீழே விடவில்லை. வாலிபர்கள் சிலர் கட்டிடத்தின் மேல் ஏறி குரங்கை பிடிக்க முயன்றனர். ஆனால் குரங்கு பையை விடாமல், கட்டிடத்தில் இருந்து இறங்கி அருகில் உள்ள கரும்பு காட்டுக்குள் ஓடி மறைந்து விட்டது. இதுபற்றி சாரதாம்பாள் கூறுகையில், ‘‘100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வயிற்றை கழுவி வருகிறேன்.

அதில் கிடைத்த பணத்தை சிறுக சிறுக சேமித்து பையில் வைத்திருந்தேன். குரங்கு தூக்கிச்சென்ற பையில் கொஞ்சம் அரிசி, ரூ.25,000 ரொக்கம் மற்றும் அரை பவுன் தோடு, அரை பவுன் மோதிரம் வைத்திருந்தேன். அதை அப்படியே பையோடு குரங்கு தூக்கிச்சென்று விட்டது. கரும்பு காட்டுக்குள் சென்று தேடிப்பார்த்தோம். எங்குமே குரங்கு பையை போடவில்லை. எங்கு சென்றது என்றும் தெரியவில்லை. கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணமும், நகையும் இப்படி போய் விட்டதே என்று அழுதபடியே கூறினார். மேலும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாபநாசம் தாசில்தார் கண்ணனிடம், சாரதாம்பாள் மனு அளித்துள்ளார். குரங்கிடம் பணப்பையை பறிகொடுத்ததால், அழுது கொண்டே இருக்கும் சாரதாம்பாளுக்கு அப்பகுதி மக்கள் ஆறுதல் கூறி, அவரை தேற்றி வருகின்றனர்.Tags : Usharayya Ushar ,monkey , Animals, cash, jewelry, monkey, grandmother