×

தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினால் அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் : உயர்நீதிமன்றம் திட்டவட்டம் !!

மதுரை: தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தில் மனு

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த ராமராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ராஜபாளையம் அருகே தர்மாபுரம் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோயிலில் 32 வருடங்களாக விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. உரிய பாதுகாப்பு, சமூக இடைவெளி பின்பற்றி இவ்வருடம் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதற்கு அனுமதியளிக்க கோரி, பல்வேறு அதிகாரிகளிடம் நேரில் சென்று மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. எனவே, வரும் 21, 22ம் தேதி விழா நடத்துவதற்கு அனுமதியளிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

மனுதாரருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை

இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ‘‘கொரோனா  தாக்கம் உலக நாடுகளையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தினந்தோறும் 6 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் மனுதாரர் எவ்வாறு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் நலத்திட்ட நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்கிறார்? இதில் எவ்வாறு கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதிக்க முடியும்? இதனால் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படலாம். இந்த மனு தேவையில்லாத ஒன்று. இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம். தற்போது இந்த மனுவிற்கு அவசரமும் கிடையாது. எனவே மனுதாரர் மனுவை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்க நேரிடும்’’ என நீதிபதி தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, மனு மீதான விசாரணை இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

வழக்கு முடித்து வைப்பு

இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசு ஏற்கனவே விநாயகர் சிலை வைத்து வழிபட தடைவிதித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.மேலும், அரசின் தடை உத்தரவை மீறுவோம் என இந்து முன்னணியின் மிரட்டல் குறித்து மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, இதுபோன்ற மிரட்டல்களிலிருந்து அரசை பாதுகாப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை என்ற தெரிவித்ததுடன், அரசு உத்தரவுகள் மீறப்பட்டால் அதை தமிழக அரசு கவனித்து கொள்ளும் எனவும் தெரிவித்தனர்.இதேபோல, தடையை மீறி விநாயகர் சிலைகளை வைக்கும் இந்து முன்னணி அமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கும், டிஜிபி க்கும் உத்தரவிடக் கோரி திருவண்ணாமலையைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவை மேற்கோள்காட்டி, முடித்து வைத்தது.

Tags : government ,statue procession ,Ganesha ,High Court ,procession , Ganesha Statue, Procession, Government, Action, High Court, Plan
× RELATED வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுங்கள்: அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை