×

பிரதமர் மோடி தொடங்கிய பிஎம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்ற உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு காரணத்தினால் மக்களுக்கு உதவிடும் விதமாக உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்ற உத்தரவிட முடியாது என தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அதுதொடர்பான மனுவை நேற்று தள்ளுபடி செய்து உத்தவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்காக, பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகள் பெறுவதற்காக, பிஎம் கேர்ஸ் நிதியம் உருவாக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இது தொடர்பான விவரங்களை கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. ஆனால், இது பொது அமைப்பு அல்ல என்று கூறி, தகவல் தெரிவிக்க பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது.

இந்த நிலையில், ஒரு அரசு சாரா தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில்,பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவுவதற்காக, தேசிய பேரிடர் நிர்வாக நிதியம் உள்ளது. அதனால், தனியாக நிதியம் அமைக்க தேவையில்லை. பிஎம்கேர்ஸ் நிதியத்தில் உள்ள பணத்தை தேசிய பேரிடர் நிர்வாக நிதியத்துக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் அசோக் பூஷன், சுபஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, தேசிய பேரிடர் நிர்வாக நிதியத்துக்கு மத்திய அரசால் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த நிதியம், மத்திய, மாநில அரசுகளால் கையாளப்படுகிறது. அதில் பொதுமக்களின் பங்களிப்பு என்பது எதுவும் கிடையாது. அதே நேரத்தில், பிஎம் கேர்ஸ் நிதியம் என்பது, பொதுமக்கள் தாமாக முன்வந்து நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் பங்கேற்க வாய்ப்பு அளித்துள்ளது. குறிப்பாக பிஎம் கேர்ஸ் நிதியம் போன்று பல்வேறு நிதியம் ஏற்கனவே உள்ளன. அதனால் தனியாக புதிய நிதியம் துவங்கக் கூடாது என்று கூற முடியாது. மேலும்,பேரிடர் நிர்வாக சட்டத்தின்படி, தேசிய பேரிடர் நிர்வாக நிதியத்தில் பிஎம் கேர்ஸ் நிதியத்தையும் சேர்க்க முடியாது’’ என வாதிட்டார்.

இதற்கு மனுதாரர் தரப்பு வாதத்தில்,தேசிய பேரிடர் மேலாண்மை நிதியம் என்பது மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரிகளால் தணிக்கை செய்யப்படுகிறது. ஆனால் பிஎம் கேர்ஸ் நிதி என்பது அவ்வாறு இல்லாமல் தனியார் தணிக்கையாளரால் கையாளப்படுகிறது. அது தான் இப்போது முக்கிய பிரச்னையாக உள்ளது. அதுகுறித்து தான் தற்போது உத்தரவு தேவைப்படுகிறது’’ என்றார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்று காரணத்தினால் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த உருவாக்கப்பட்டுள்ள பிஎம் கேர்ஸ் நிதிக்கு எதிராக புதிய திட்டம் என ஒன்றும் தேவையில்லை. அதற்கான அவசியமும் கிடையாது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்க பெறுகிறதா என்பதை மட்டும் தான் பார்க்க வேண்டுமே தவிர, அதைத் தவிர்த்து திட்டத்தையே முழுமையாக குறை கூறக் கூடாது. இது அரசின் கொள்கை சார்ந்த விவகாரம் என்பதால் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. பிஎம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதியத்திற்கு மாற்ற வேண்டுமென உத்தரவிட முடியாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

* காங்கிரசுக்கு பலத்த அடி
பாஜ தலைவர் ஜேபி நட்டா டிவிட்டர் பதிவில், “பிஎம் கேர்ஸ் நிதியை மாற்றக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பானது ராகுல்காந்தியின் மோசமான எண்ணங்கள் மற்றும் எதையும் எதிர்க்கும் அவரது குழுவினருக்கு கிடைத்த மிகப்பெரிய அடியாகும். இதன் தீர்ப்பின் மூலம் காங்கிரஸ் மற்றும் அதனை சேர்ந்தவர்களின் தவறான நோக்கம் மற்றும் தீங்கு விளைவிக்கும் முயற்சிகள் இருந்தபோதிலும் உண்மை ஒளிவீசுகிறது என்பதை இது காட்டுகின்றது’’ என குறிப்பிட்டுள்ளார்.

* வெளிப்படைத்தன்மைக்கு விழுந்த வேட்டு
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா தனது டிவிட்டர் பதிவில், “உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது மக்களுக்கான அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் மீது விழுந்த பலத்த அடியாகும். அவர்கள் மன்னர்கள் அல்ல; மக்களின் ஊழியர்கள் என்பதை நினைவூட்டுங்கள். சூரிய ஒளி தான் சிறந்த கிருமி நாசினி என்ற நம்பிக்கையில் இருந்து உச்சநீதிமன்றம் விலகியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Modi ,National Disaster Fund: Supreme Court , Prime Minister Modi, BM Cars Fund, National Disaster Fund, cannot be ordered to change, Supreme Court verdict
× RELATED இந்திய மகள்களின் பாதுகாப்பை விட...