×

மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்; தேடப்பட்டது தெரியாமல் 9-வது முறையாக கொரோனா நிவாரண நிதி வழங்க வந்த யாசகர்: அறிவித்த விருதை வழங்கி கவுரவித்த ஆட்சியர்

மதுரை: சுதந்திர தினவிழாவில் விருது வழங்க தேடப்பட்டது தெரியாமல் இன்று 9-வது முறையாக ரூ.9 ஆயிரம் கொரோனா நிவாரணம் வழங்க வந்த யாசகர் பூல்பாண்டியக்கு மதுரை ஆட்சியர், அவருக்கு அறிவித்த விருதை வழங்கி கவுரவித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவுவதற்கும், இந்தத் தொற்றை தடுப்பதற்கும் பல்வேறு தரப்பினர் அரசுக்கு நிவாரணநிதி வழங்கி வருகின்றனர். ஆனால், பொது இடங்களில் யாசகம் பெறும் தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டி, தொடர்ந்து எட்டு முறை தலா ரூ.10 ஆயிரம் வீதம் 80 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி தன்னுடைய பொதுநலத்தை இந்த சமூகத்திற்கு உணர்த்தினார்.

இவர், ஒரே இடத்தில் தொடர்ந்து தங்குவதும் இல்லை. யாசகம் பெறுவதும் இல்லை. ஒவ்வொரு நாளும் வெவ்வெறு பகுதிகளுக்குச் சென்று யாசகம் பெறுகிறார். அதனாலேயே, சுதந்திர தினவிழாவில் இவரை கவுரவிக்கும் வகையில் மதுரை ஆட்சியர் விருது அறிவித்தும் பூல்பாண்டி தங்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் அந்த விருதை கடைசி வரை அவருக்கு வழங்க முடியவில்லை. தொடர்ந்து அதிகாரிகள், பூல்பாண்டியைத் தேடி வந்தனர். இந்நிலையில் தன்னை மதுரை மாவட்ட நிர்வாகம் சுதந்திர தினவிழா விருது வழங்கத் தேடுவதை அறியாமல் வழக்கம்போல் யாசகம் பெற்ற பணம் ரூ.10 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு கொரோனா நிவாரண நிதியை வழங்க ஆட்சியரை சந்திக்க இன்று வந்தார்.

அவரைப் பார்த்து நிம்மதியடைந்த அதிகாரிகள் அவரிடம், அவருக்கு விருது வழங்கிய விவரத்தைத் தெரிவித்து ஆட்சியர் டி.ஜி.வினயிடம் அழைத்துச் சென்றனர். பூல்பாண்டியோ, தான் கொண்டு வந்த ரூ.10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கி ஆட்சியரை நெகிழச் செய்தார். ஆட்சியர் அவரின் சேவையைப் பாராட்டி, அவருக்கு அறிவித்த சுதந்திரதினவிழா விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கிக் கவுரவித்தார். ஆனால், அவரோ எந்த சலனமும் இல்லாமல் வழக்கம்போல் ஆட்சியிரிடம் விடைப்பெற்றுச் சென்றார்.


Tags : Yasakar ,Flexibility incident ,Madurai ,collector ,Corona Relief Fund ,Yasagar , Madurai, Corona Relief Fund, Yasagar
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை