இந்தி மட்டும் தான் இந்தியாவை ஆளப்பிறந்த மொழி என்ற ஆதிக்கம் சரியாகுமா?: கவிஞர் வைரமுத்து சரமாரி கேள்வி..!!

சென்னை: இந்தி மட்டுமே மொழியா? வடக்கு மட்டுமே திசையா? என்று கவிஞர் வைரமுத்து சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள வைரமுத்து, இந்தி தெரியாவிடில் நீங்கள் இந்தியரா? என்ற வினா ஆபத்தானது என்றும், இன்னொரு மோசமான கேள்விக்கும் ஆயப்படுத்துவது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஓர் அதிகாரியின் தனிக்குரல் என்று இதனை எடுத்துக்கொள்ள முடியாது என்றும் ஆதிக்கத்தின் அம்பறாத் தூணிலிருந்து தெற்கு நோக்கி வீசப்பட்ட நஞ்சில் நனைத்த அம்பு என்றும் வைரமுத்து சாடியுள்ளார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை நோக்கி மட்டும் கேட்கப்பட்ட கேள்வியன்று என குறிப்பிட்ட அவர், வடக்கின் விரல் தெற்கை நோக்கி நீண்டு கேட்கும் நீண்ட கால கேள்வி இது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை பகுக்க பயன்பட்ட மொழிகள், இணைப்பதற்கும் பயன்பட வேண்டும் என்பது தானே ஒருமைப்பாட்டின் உயிர்த்தலம் என்று கவிஞர் வைரமுத்து வினவியுள்ளார். இந்தி மட்டும் தான் இந்தியாவை ஆளப்பிறந்த மொழி என்ற ஆதிக்கம் சரியாகுமா? இந்தியாவுக்கு வடக்கு மட்டும் தான் திசையாகுமா? என்றும் வைரமுத்து சரமாரியாக கேள்விகளை முன்வைத்துள்ளார். முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் இந்தி தெரியாது என்பதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரியால் புகாருக்குள்ளானதாகவும் வைரமுத்து சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் சமஉரிமை 22 மொழிகளுக்கும் வழங்கப்படுவது தான் நாட்டை இணைத்திருக்கும் கயிற்றை இற்று போகாமல் கட்டிக்காக்கும் என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Related Stories:

>