×

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு பொது விருந்து இல்லை: கொரோனா ஊரடங்கு அமலால் நடவடிக்கை

சென்னை:  சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்படுவது வழக்கம். சென்னையில் 33 கோயில்கள் உட்பட தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்படுகிறது. இதில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். இந்தாண்டு கொரோனா பரவுவதை தடுக் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், சுதந்திர தின விழா சிறப்பு நிகழ்ச்சிகளில் கூட முதியோர், பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர்கள் அலுவலகத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் 500 பேருக்கு மேல் கலந்து கொள்ள கூடாது என்றும், சமூக இடைவெளியை பின்பற்றுவது, முக கவசம் அணிவது, சானிடைசர், சோப் போட்டு அடிக்கடி கை கழுவது போன்ற ஐசிஎம்ஆரின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்தாண்டு சுதந்திர தினத்தையொட்டி இந்து சமய அறநிலையத்துறையில் சார்பில் நடைபெறும் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து கிடையாது என்று அறநிலையத்துறை சார்பில் கோயில் அலுவலர்களுக்கு தெரிவித்துள்ளது.

இதனால், இந்தாண்டு அறநிலையத்துறை சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்துக்கான ஏற்பாடுகளை செய்வதை கோயில் அலுவலர்கள் நிறுத்தி வைத்தனர். அதே நேரத்தில் கோயில்களில் வழக்கம் போல் அர்ச்சகர்கள் மூலம் பூஜை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்று அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags : feast ,Corona ,temples ,Independence Day , Independence Day, temples, special worship No public feast, corona, curfew
× RELATED தருவைக்குளம் புனித ஜெபமாலை ஆலய திருவிழாவில் அசன விருந்து