×

கொரோனாவுக்கு மருந்து தயாரித்ததாக விளம்பரம்: பதஞ்சலி நிறுவனத்துக்கு விதித்த தடை நிறுத்திவைப்பு: மேல்முறையீடு வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனா வைரசுக்கான மருந்து தயாரிக்க ‘கொரோனில்’ என்ற பெயரை பதஞ்சலி நிறுவனம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை உத்தரவை 2 வாரங்கள் நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   கொரோனா வைரசுக்கு ‘கொரோனில்’ என்ற மருந்து கண்டுபிடித்துள்ளதாக  பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளையும் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாகவும், இதன்மூலம் தங்கள் நிறுவனத்தின் வணிகச் சின்னத்தை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாகவும் கூறி, திருவான்மியூரை சேர்ந்த ஆருத்ரா இன்ஜினியர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து பதஞ்சலி நிறுவனம் அதே நீதிமன்றத்தில் முறையிட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி,  கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடை உறுதி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.
 மேலும், மக்களின் அச்சத்தையும், பீதியையும் பயன்படுத்தி மேலும் லாபம் பார்க்க முயற்சிப்பதாகக் கூறி, அந்நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த உத்தரவை எதிர்த்து பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்குகள் நீதிபதிகள் சுப்பையா, ் சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில், ஆயூஷ் அமைச்சகம்  மற்றும் உத்தரகாண்ட் அரசின் முறையான அனுமதி பெற்றே ‘திவ்யா கொரோனில்’ மருந்து தயாரித்ததாகவும், ஜூலை மாதம் விற்பனையை தொடங்கிவிட்ட நிலையில், தனி நீதிபதியின் கடுமையான உத்தரவால் தங்கள் நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.  தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை 2 வார காலம் நிறுத்தி வைத்து வழக்கின் இறுதி விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.


Tags : Corona ,Patanjali ,ICC , Corona, Pharmaceutical Product Advertising, Patanjali Company, Appeal,HC
× RELATED சென்னை முழுவதும் உள்ள விளம்பர...