×

ராஜஸ்தான் பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கெலாட் அரசு வெற்றி: பாஜ எம்எல்ஏ.க்கள் அமைதி

ஜெய்ப்பூர்: ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்த அரசியல் குழப்பத்துக்குப் பிறகு ராஜஸ்தானில் நேற்று கூட்டப்பட்ட சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில், முதல்வர் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே நடந்த அதிகார மோதலால், கட்சியிலும், ஆட்சியிலும் பெரும் குழப்பம் நிலவியது. பைலட் தனது ஆதரவு எம்எல்ஏ.க்கள் 18 பேருடன் வெளியேறியதால், கெலாட் அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக பாஜ குற்றம்சாட்டியது. பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை கட்சி மேலிடம் பறித்தது. இதைத் தொடர்ந்து, பாஜ.வின் குதிரை பேரம் தீவிரமாக நடந்தது.

அதனிடம் இருந்து காப்பாற்ற, தனது கட்சி எம்எல்ஏ.க்களை காங்கிரஸ் பாதுகாப்பான இடத்தில் பாதுகாப்பாக தங்க வைத்தது. இதனால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இம்மாநில அரசியலில் பெரும் குழப்பம் நிலவியது. ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டதால், தனது பெரும்பான்மை நிரூபிப்பதற்காக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டும்படி ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் கெலாட் தொடர்ந்து வலியுறுத்தினார். அதை ஏற்றுக் கொண்ட அவர், ஆகஸ்ட் 14ம் தேதி சிறப்பு கூட்டத்தை கூட்ட ஒப்புக் கொண்டார். இதற்கிடையே, ராகுல் காந்தியின் சமாதான முயற்சியைத் தொடர்ந்து, அசோக் கெலாட்டுடன் இணைந்து பணியாற்றுவதாக சச்சின் பைலட் சில தினங்களுக்கு முன் அறிவித்தார். இதன் மூலம், காங்கிரசில் நிலவிய குழப்பம் முடிவுக்கு வந்தது.

கடந்த வியாழக்கிழமை முதல்வர் அசோக் கெலாட் வீட்டில் நடந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலும் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பைலட் கலந்து கொண்டார். இந்நிலையில், சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நேற்று கூடியது. இதில், கெலாட் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரப்போவதாக பாஜ அறிவித்து இருந்த நிலையில், அதை முந்திக் கொண்டு கெலாட்டே நம்பிக்கை வாக்கெடுப்பு கோர முடிவு செய்தார். அதன்படி,  நம்பிக்கை வாக்கெடுப்புக்கான முன் மொழிவை சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவாகரத்துறை அமைச்சர் சாந்தி தாரிவால் தாக்கல் செய்தார். இதன் மீது நடந்த விவாதத்துக்குப் பிறகு, குரல் வாக்கெடுப்பு நடந்தப்பட்டது. இதில், கெலாட் அரசு வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. இக்கூட்டத்தில் பாஜ அமளி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது அமைதியாக இருந்தது.

முதலில் முதல் வரிசை
இப்போது 2வது வரிசை
சட்டப்பேரவையில் இதற்கு முன் முதல்வர் கெலாட்டின் இருக்கைக்கு அடுத்து, சச்சின் பைலட்டின் இருக்கை இருந்தது. தற்போது, 2ம் வரிசையில் அவருக்கு இருக்கை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால், பைலட் அதை கண்டுக் கொள்ளாமல் அந்த இருக்கையில் போய் அமர்ந்தார்.

யாருக்கு, எத்தனை எம்எல்ஏ
மொத்தம் 200 எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ள ராஜ்ஸ்தான் சட்டப்பேரவையில், 107 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் தரப்பில் உள்ளனர். இவர்களில் சச்சின் ஆதரவு எம்.எல்.ஏக்களும் அடங்குவர். காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையையும் கூட்டினால் காங்கிரசின் எம்.எல்.ஏக்களின் பலம் 124 ஆகிறது. எதிர்க்கட்சியான பா.ஜ.க தரப்பில் 72 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர்.

அக்பரை போல் தோற்ற பாஜ
நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை தாக்கல் செய்து சாந்தி தாரிவால் பேசுகையில், ‘‘மத்தியப் பிரதேசம், மணிப்பூர், கோவாவைப் போன்றே ராஜஸ்தானிலும் குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கும் முயற்சியை பாஜ செய்தது.  தனது ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த முயன்ற மொகலாயப் பேரரரசர் அக்பருக்கே தோல்வியை பரிசளித்த மண் ராஜஸ்தான். பாஜ.வின் ஆட்டமும் அதேபோல் தோல்வியில் முடிந்திருக்கிறது,’’ என்றார்.

எந்த விலையை கொடுத்தும்
கட்சியை காப்பாற்றுவேன்
நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை ஆதரித்து பைலட் பேசுகையில், ‘‘காங்கிரசின் உறுதியான போர்வீரன் நான். எத்தகைய விலை கொடுத்தேனும் கட்சியைக் காப்பாற்றுவேன். இருக்கை மாற்றி அமைக்கப்பட்டதில் வருத்தம் இல்லை. கட்சியிலும், ஆட்சியிலும் இப்போதுதான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன்,’’ என்றார்.

எப்படி  தருவீங்க... என்ன கொள்கை?
கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்நாட்டிடம் இருந்தும், மற்ற மருந்து நிறுவனங்களிடம் இருந்தும் தடுப்பு மருந்தை வாங்குவது பற்றி முடிவு எடுக்க, உயர்நிலை குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல் பற்றியும், அவற்றை மாநிலங்களுக்கு விநியோகிக்கும் முறைபற்றியும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘இந்தியா கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நாடுகளில் ஒன்றாக இருக்க வேண்டும். மேலும், தடுப்பு மருந்தை கொள்முதல் செய்வதில் சமமான அணுகுமுறை அவசியம். அதை அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கச் செய்வது, மாநிலங்களுக்கு எப்படி சமமாக பிரித்து வழங்குவது என்பது பற்றிய தெளிவான கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.



Tags : government ,Gelat ,Rajasthan ,confidence vote ,BJP ,BJP MLAs ,assembly , Rajasthan Assembly, confidence vote, Gelat government wins, BJP MLA
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...