×

மார்த்தாண்டத்தில் பரபரப்பு; பறிமுதல் வாகனங்களை விற்று ஆட்டைய போட்ட போலீசார்?... எஸ்பி நேரடி விசாரணையில் குட்டு அம்பலம்

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்களை போலீசார் விற்பனை செய்து பணத்தை பங்கிட்டதாக எழுந்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட எஸ்பி நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார். மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள், உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்து நிறுத்தி வைத்திருந்தனர். இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருடப்பட்ட புதிய வாகனங்களுக்கு போலி ஆர்சி புக் தயாரித்து கொடுத்த வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர் உள்பட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சில பைக்குகளையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்து நிறுத்தி இருந்த பைக்குகள் சிலவற்றை காணவில்லை. அந்த பைக்குகளை போலீசார் விற்று பணத்தை பங்கிட்டதாக தகவல் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவல் வெளியானதால் மாவட்ட எஸ்பி மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள், வழக்கு பதிவு செய்யாத வாகனங்கள் என்று அனைத்து வாகனங்களின் விவரங்களையும் சேகரித்து அனுப்ப போலீசாருக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் காவல் நிலையத்தில் பணியாற்றிய 5 பேரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி திடீரென அதிரடியாக உத்தரவிட்டார். வாகனங்கள் மாயமான விவகாரத்தில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் மாற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காவல் நிலையத்தில் நின்ற வாகனங்களை விற்ற சம்பவம் எஸ்பிக்கு தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்த சிலர் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. எனவே இதுதொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் சமீப காலமாக கட்டப்பஞ்சாயத்து நடப்பதாகவும், மணல் கடத்தல் கும்பல், கந்துவட்டி கும்பலுடன் இங்குள்ள போலீசாருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், இதற்காக மாதந்தோறும் அதிக தொகை கைமாறுவதாகவும் கூறப்படுகிறது. எனவே இங்கு நீண்ட காலமாக பணியாற்றும் போலீசாரை மாற்றிவிட்டு நேர்மையான அதிகாரிகள் மற்றும் போலீசாரை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : investigation ,Martha's Vineyard ,SP ,Kuttu , Marthandam, confiscated vehicles, police
× RELATED ஆந்திரா தேர்தல் வன்முறையில்...