×

கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது பொருளாதார குற்றவியல் நீதிமன்றம்!

திருவனந்தபுரம்: கேரளா தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவை பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சலில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சரித், சந்தீப் நாயர் மற்றும்  பைசல் பேரத் ஆகியோர் மீது தீவிரவாத நிதி திரட்டல், சட்டவிரோத தடுப்பு செயல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷை விசாரணை செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, மேலும் மூன்று நாட்கள் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிடையில் ஸ்வப்னா ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதனால் மீண்டும் ஸ்வப்னா ஜெயிலில் அடைக்கப்படுகிறார். ஏற்கனவே என்.ஐ.ஏ. கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Swapna Suresh ,Kerala ,Economic Crimes Court ,Crimes Court , Kerala, Gold Smuggling, Swapna Suresh, Bail, Economic Criminal Court
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...