×

கோமா நிலைக்கு சென்ற பிரணாப் முகர்ஜி..: தனது தந்தை உயிருடன் இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் மகன் வேண்டுகோள்!

புதுடெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கோமா நிலைக்கு சென்ற நிலையில், தனது தந்தை உயிருடன் இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவரது மகன் அபிஜித் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர்  பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டு காரணமாக ஆகஸ்ட் 10ம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. எனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாச வசதியுடன் பிரணாப் முகர்ஜிக்கு சிகிச்சை தொடங்கப்பட்டது. மற்றொரு பக்கம் கொரோனா சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், பிரணாப் முகர்ஜி காலமாகிவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இன்று காலையில் இருந்து ட்விட்டரில் #ripPranabMukherjee என்ற ஹேஸ்டேக் டிரெண்ட் ஆகி இருந்தது. இந்த நிலையில், தனது தந்தையின் உடல்நிலை குறித்து, இன்று காலை முதல் சில பிரபலங்கள் உள்ளிட்டோரும் தவறான தகவலை சமூக வலைத்தளத்தில் பதிகிறார்கள். பிரணாப் முகர்ஜி உயிரோடு உள்ளார் என்று, பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் முகர்ஜி தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கிடையே , பிரணாப்பின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். சுயநினைவின்றி(கோமா நிலையில்) உள்ள அவருக்கு, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது, என ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Pranab Mukherjee , Coma, Pranab Mukherjee, son, Army Hospital, Corona
× RELATED இப்போது இருந்தால்...