×

இ-பாஸ் மூலம் அனைவரையும் முடக்கிப் போட்டுள்ள அதிமுக அரசை நம்பிப்பயனில்லை தமிழக மக்களே: மு.க.ஸ்டாலின்!!

சென்னை : அனைத்திலும் தோல்வியடைந்து விட்ட நிலையில், இ-பாஸ் மூலம் அனைவரையும் முடக்கிப் போட்டுள்ள அ.தி.மு.க. அரசைத் தமிழக மக்கள் இனியும் நம்பியிருக்காமல் - கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தாங்களே “சுய பாதுகாப்பு” நடவடிக்கைகளில் கவனமாக ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில்,

கொரோனா நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை மாநில அளவில் 3 லட்சத்திற்கும் அதிகமாகவும், சென்னையில் 1 லட்சத்தையும் தாண்டியிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. “3 நாளில் போய் விடும்” “10 நாளில் குறைந்து விடும்” “இது பணக்காரர்கள் வியாதி” என்றெல்லாம் ஏனோதானோ என்று பொறுப்பற்ற முறையில் பேசினார் முதலமைச்சர் திரு. பழனிசாமி!

திறமையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை, திட்டமிட்டு முறையாக எடுக்க முடியாமல், வெற்று நம்பிக்கையை ஊட்டி, மக்களை நட்டாற்றில் தவிக்க விட்ட அவர் தலைமையிலான அ.தி.மு.க. அரசின் நிர்வாகத் தோல்வி இன்றைக்கு இந்திய அளவில் கொரோனா நோய்த் தொற்றில் இரண்டாவது பெரிய மாநிலமாக உருவெடுத்து தமிழ்நாட்டிற்கு அவப்பெயரையும், தமிழக மக்களுக்கு பெரும் பதற்றத்தையும் தேடித் தந்து விட்டது.

கடந்த ஒரு மாதத்தில் கொரொனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 163 சதவீதம் அதிகரித்து விட்டது. இறந்தோரின் எண்ணிக்கை 228 சதவீதமும், இறப்பு விகிதம் 23 சதவீதமாகவும் எகிறி விட்டது. கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் 14 சதவீதம் அதிகரித்து - தினமும் 6 ஆயிரம் பேர் மாநில அளவிலும், சென்னையில் 1000 பேரும் நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் கொடுமை தொடர்கிறது.

கடந்த பத்து நாட்களில் மட்டும் 1224 பேர் இந்த நோயால் மரணமடைந்து - தினமும் “100-க்கும் மேற்பட்டோர் இறப்பு” என்ற அபாயகரமான நிலையை எட்டியிருக்கிறது தமிழ்நாடு. ஜனவரி 7-ம் தேதியே கொரோனா குறித்துத் தெரிந்திருந்தும், மார்ச் 7-ம் தேதியன்று “முதல் கொரோனா நோய்ப் பாதிப்பு” வரும் வரை நடவடிக்கை எடுக்காமல் குறட்டைவிட்டுத் தூங்கியது இந்த அரசு. முதல் நோய்த் தொற்று ஏற்பட்ட மார்ச் 7-ம் தேதியிலிருந்து மத்திய அரசின் ஊரடங்கு அறிவிப்பிற்காக மார்ச் 24-ம் தேதி வரை காத்திருந்ததன் விளைவாக - முன்கூட்டியே எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தையும் கோட்டை விட்டு “கமிஷன் அடிக்கும்” டெண்டர்களில் மட்டுமே  கவனம் செலுத்தியது அ.தி.மு.க. அரசு.

கோயம்பேடு மார்க்கெட்டை மூடியதில் தாமதம், உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடைகளைத் திறந்ததில் அவசரம், ஊரடங்கு காலத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களைத் தேர்வு எழுத வைத்தது, மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் ஊழல், மருத்துவப் படுக்கைகள் அடிப்படையில் எத்தனை மருத்துவர், செவிலியர், எவ்வளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன என்பதை மறைத்தது, மாவட்ட வாரியாக கொரோனா நோய் பரிசோதனை எண்ணிக்கையை வெளிப்படையாக அறிவிக்காதது, 444 கொரோனா மரணங்களை மனச்சாட்சியின்றி மூடி மறைத்தது, முன்களப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் நாட்டிலேயே அதிகமாகத் தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழப்பிற்குக் காரணமாக இருந்தது, கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் உயிர்த்தியாகம் செய்த முன்களப் பணியாளர்களுக்கு அறிவித்த 50 லட்சம் ரூபாய் இழப்பீட்டை 25 லட்சம் ரூபாயாகக் கருணையின்றிக் குறைத்து - இன்றுவரை ஒருவருக்குக் கூட இழப்பீடு வழங்காமல் அலைக்கழிப்பது, உயிர்த் தியாகம் செய்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் அறிவிப்பைக் காற்றில் பறக்க விட்டது, கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு நோய்க்குள்ளான ஆயிரக்கணக்கான முன்களப் பணியாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக அறிவிக்கப்பட்ட 2 லட்சம் ரூபாயை இதுவரை வழங்காதது - எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது கூட 1.5 லட்சம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வை நடத்தியே தீருவோம் என்று அடம் பிடிப்பது என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி - மாநில பேரிடர் தலைவர் என்ற முறையில் செய்த அனைத்து நிர்வாக தோல்விகளுக்கும் தனியாக ஒரு பெரிய “அகராதி”-யே வெளியிடலாம் !

இதுபோன்ற சூழலில் தனக்குத் தெரிந்த நிர்வாகம் - மதுக்கடைகளைத் திறந்து வைத்துக்கொண்டு, “ஊரடங்குகளைப் பிறப்பிப்பது மட்டுமே” என்று ஒவ்வொரு ஊரடங்காக அறிவித்து - பிறகு பெயரளவிற்குத் தளர்வுகளைச் சொல்லி விட்டு - மக்கள் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்குச் செல்ல முடியாமல் “இ-பாஸ்” முறையில் தடுத்து வருகிறது அ.தி.மு.க. அரசு. ஊழல் தலைவிரித்தாடும் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யாமல், ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும், வீட்டிற்குள்ளேயே மக்கள் - குறிப்பாக வாழ்வாதாரத்தைத் தேடும் ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், கட்டிப் போட்டிருப்பதைப் போல, முடக்கப்பட்டுள்ளார்கள்.

இறப்புகளின்போது தங்களின் உற்றார் உறவினர் முகத்தைக் கூட பார்க்க முடியாத சோகத்தில் மிதக்கிறார்கள். இனியும் அரசை நம்பிப் பலனில்லை - “நமக்கு நாமே பாதுகாப்பு” என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்கள் - எது வரினும் வரட்டும் என்று சுய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தற்போது முயற்சி செய்கிறார்கள்.

கொரோனா பரவி ஏறக்குறைய 7 மாதங்கள் கழித்து இப்போதுதான்  முதலமைச்சர் திரு. பழனிசாமி, உண்மை நிலவரம் உணர ஆரம்பித்திருப்பது போல் பேசத் துவங்கியுள்ளார். “இந்தியாவிலேயே கொரோனா தடுப்புப் பணியில் தமிழகம் முதலிடம்” என்று ஆகஸ்ட் 7-ம் தேதி திருநெல்வேலியிலும், அடுத்த நாள் “கொரோனா வைரஸ் நோய்த் தொற்று படிப்படியாகக் குறையத் தொடங்கியிருக்கிறது” என்று சேலத்திலும் பேசிய முதலமைச்சர், நேற்றைய தினம் கள்ளக்குறிச்சியில் தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார்.

அங்கே பேசிய முதலமைச்சர், “தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி இயல்பு நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது” என்ற உண்மையை ஒப்புக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எல்லாம் எடுத்துச் சொன்னபோது ஏற்றுக் கொள்ளாமல் வெறும் வாய்ச் சவடாலிலேயே காலத்தை விரயம் செய்துவந்த முதலமைச்சர், தற்போது கொரோனா நோய்த் தொற்று 3 லட்சத்தைத் தொட்டவுடன் “கடுமையான பாதிப்பு” என்ற நிலைமையை எட்டியிருக்கிறார். ஆகவே இதுவரை எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை - குறிப்பாகப் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக, தமிழ் மக்களின் பாதுகாப்பு கருதி, நான் முன்வைத்த பல்வேறு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை ஏற்கவில்லை என்றாலும் - இனியாவது மக்களின் பாதிப்பைத் தயவு செய்து எண்ணிப் பாருங்கள். நீங்களே கூறியிருப்பது போல் மோசமாகி விட்ட இயல்பு நிலையை மாற்ற ஆலோசனை நடத்துங்கள். குடும்பத்திற்கு 5000 ரூபாயும், உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாயும் வழங்கி - 3 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா பாதிப்பு மேலும் சில லட்சங்களைத் தொட்டுவிடாமல் இருக்க அனைத்து மருத்துவப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்யுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தான் ஒரே தீர்வு என்று அ.தி.மு.க. அரசு சொன்னது. ஆனால் மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்குக் காலம் ஆகஸ்ட் மாதத்தை நெருங்கியபிறகும் கொரோனா பாதிப்பு குறையவில்லை; கூடிக்கொண்டு தான் போகிறது. அப்படியானால் இவர்களுக்கு ஊரடங்குச் சட்டங்களைக் கூட ஒழுங்காக அமல்படுத்தத் தெரியவில்லை; அதற்குக் கூடத் தகுதி இல்லாதவர்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.

பள்ளி - கல்லூரிகள், பொதுப் போக்குவரத்து, கோவில்கள் தவிர எல்லாம் செயல்பட அனுமதித்துவிட்டு, இதனை ஊரடங்கு என்று சொல்வதைப் போல சட்டக்கேலிக்கூத்து இருக்க முடியாது. இந்தக் கண்துடைப்பு நாடகத்தின் மூலமாக இலட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழந்ததுதான் அவர்கள் கண்ட பலன். இவ்வளவுக்குப் பிறகும் கொரோனா பரவல் தடுக்கப்படவில்லை.

முன்னெச்சரிக்கை - பாதுகாப்பு - ஊரடங்கு - மருந்துகள் - உபகரணங்கள் எதனையும் முறையாகப் பயன்படுத்தும் சக்தியை இழந்துவிட்ட ‘கோமா’ நிலையை அ.தி.மு.க. அரசு அடைந்துவிட்டது.

இந்த ஊரடங்கைக் கண்துடைப்பு நாடகமாகவே மக்களில் பெரும்பாலானவர்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்தக் கண்துடைப்பு நாடகத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது என்று மக்கள் கேட்கிறார்கள்.

மதிப்பிற்குரிய தமிழக மக்களே! அனைத்திலும் தோல்வியடைந்து விட்ட அ.தி.மு.க. அரசை இனியும் சிறிதுகூட நம்பியிருக்காமல் - கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள “சுய பாதுகாப்பு” நடவடிக்கைகளில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று மிகுந்த அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்! அது ஒன்றுதான் உயிர்ப் பாதுகாப்புக்கான ஒரே வழி என்று தோன்றுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : government ,MK Stalin ,Tamil Nadu ,AIADMK , The people of Tamil Nadu do not trust the government which has disabled everyone through e-pass! Focus on self-defense: MK Stalin !!
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...