×

ஓபிசி இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த கோரி கலெக்டர் ஆபீஸ் முன் விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் போராட்டம்: ஆதிவாசி போல இலைகளை இடுப்பில் கட்டி வந்தனர்

திருச்சி: ஓபிசி இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் இலைதழைகளை கட்டிக்கொண்டும், சுரைக்காய்களை கைகளில் ஏந்தியும் அரை நிர்வாணத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓபிசி இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த கோரி திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள் ஆதிவாசிகள் போல இலைதழைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு அரை நிர்வாணத்துடன் காய்கறிகளுடன் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.

அகில இந்திய பார்வார்டுபிளாக் (பசும்பொன்) மாநில செயலாளர் காசிமாயதேவர், சீர்மரபினர் நலசங்கம் சூரியூர் முத்துராமலிங்கம், முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது போலீசார், அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்குள்ளே விடாமல் பேரிகார்டுகள் வைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், ‘உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஓபிசி இட ஒதுக்கீட்டில் எஸ்சிக்கு 18, எஸ்டி 1, பிசி 30, எம்பிசி 20 என 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதை வழங்காமல் மத்திய அரசு சர்மா கமிஷன் மூலம் கிரிமிலேயரை புகுத்தி ஓபிசிக்களுக்கான வேலைவாய்ப்பை பறிக்கிறது.

இதை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி எங்களை ஆதிவாசிபோல் ஆக்கியதை சுட்டிகாட்டி இலைகளை கட்டிக்கொண்டு தர்ணாவில் ஈடுபட்டுள்ளோம்’ என்றார். தகவல் அறிந்து டிஆர்ஓ பழனிகுமார், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொள்ள வந்தார். ஆனால் அவர்கள், கலெக்டரை நேரில் சந்திக்க வேண்டும் என வலியுறுத்தியதால் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 4 பேர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கலெக்டர் சிவராசுவிடம் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்துவிட்டு போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

Tags : Collector ,implementation ,Office , OBC reservation, peasants, struggle with half-naked
× RELATED 2.5 கிலோ நகை அணிந்து வந்த கர்நாடக...