×

‘புது டேம் கட்டியே ஆகணும் சாரே...’ பெரியாறு அணை குறித்து சர்ச்சை வீடியோ: கேரள சினிமா தயாரிப்பாளருக்கு வலுக்கிறது எதிர்ப்பு

கூடலூர்: பெரியாற்றில் புதிய அணை என்ற புதிய கோரிக்கையுடன் கேரள சினிமா தயாரிப்பாளர் குறும்படம் வெளியிட்டு ஆதரவு கேட்டு வருவது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கேரள திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் எடிட்டர் பிரதீப் எமிலி. இவர் பெரியாறு அணை குறித்து ‘முல்லப்பெரியார் ஒரு முன்கருதல்’ என ஆறரை நிமிடங்கள் ஓடக்கூடிய 3டி அனிமேஷன் குறும்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ‘‘நூறாண்டுக்குமேல் பழமையான பெரியாறு அணை எப்போது வேண்டுமானாலும் ஆயிரக்கணக்கானோரை பலி வாங்கலாம். தற்போதைய அணையிலிருந்து சற்று தள்ளி புதிய ஆர்ச் டேம் (வளைவு அணை) கட்ட வேண்டும்.

இரண்டு அணைக்கும் இடையே உள்ள இடைவெளியில் கான்கிரீட் கொண்டு நிரப்பி இணைத்து பலப்படுத்த வேண்டும். அணையின் மேல்பகுதி வழியாக வல்லக்கடவு, கெவி சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் செல்வதால் கேரள சுற்றுலாத்துறைக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மக்கள் இதை யோசித்து கோரிக்கையாக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோவால் மீண்டும் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
இதுகுறித்து பெரியாறு அணை மீட்புக்குழு தலைவர் ரஞ்சித்குமார் கூறுகையில், ‘‘இந்தியாவில் உள்ள தலைசிறந்த வல்லுநர்கள் சோதனை செய்து, பெரியாறு அணை பலமாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதனால்தான் உச்சநீதிமன்றம் 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்ற தீர்ப்பை அளித்தது. பெரியாற்றில் புதிய அணை என்ற திட்டம் கேரள அரசால் 1980, 2007, 2015 என மூன்று முறை முயற்சி செய்து, சாத்தியக்கூறுகள் இல்லை என கைவிடப்பட்ட திட்டம்.  இதை கேரள அரசும், அரசியல்வாதிகளும், மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு முறை நடந்த பெரியாறு அணை போராட்டம் கேரளாவையே நடுங்க வைத்தது. மீண்டும் ஒரு பெரியாறு அணை போராட்டம் தேவைதானா என்பதை கேரளாவே முடிவு செய்ய வேண்டும். எனவே இதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

Tags : filmmaker ,Periyar Dam ,dam ,Kerala ,kattiye , Periyar Dam, Kerala Cinema Producer
× RELATED கடும் வெயிலின் காரணமாக பிளவக்கல் அணை நீர்மட்டம் சரிவு