×

கன மழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 23 நாளில் நீர்மட்டம் இருமடங்கு உயர்வு

உடுமலை: கன மழையால் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்துள்ளது. 23 நாளில் அணையின் நீர்மட்டம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இதன் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் அணையில் இருந்து நேரடியாக கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால்வழியே 3500 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இதுதவிர அமராவதி ஆற்றின் வழியோரம் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

அணையில் இருந்து ஆண்டுதோறும் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆறுவழியாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு பிரதான கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்படும்.கடந்த இருவாரங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, கூட்டாறு, தேனாறு ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து, தூவானம் அருவி வழியாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி அமராவதி அணையின் நீர்மட்டம் 41 அடியாக இருந்தது. அப்போதுஅணைக்கு 127 கனஅடிமட்டுமே நீர்வரத்து இருந்தது.  நேற்றைய நிலவரப்படி அணைக்கு 3,284 கன அடிநீர் வந்துகொண்டுள்ளது.

அணையின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து 85.90 அடியை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி எப்போது வேண்டுமானாலும் உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால் பொதுப்பணித்துறையினர் அமராவதி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தொடர்மழையால் 23 நாட்களில் அணையின் நீர்மட்டம் 41 அடியில் இருந்து இருமடங்காக அதிகரித்து 85 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணை நாளைக்குள்  முழுகொள்ளளவை எட்டும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Amravati Dam , Heavy rains, Amravati dam, rising water level, rising water level
× RELATED அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 6,500 கனஅடி நீர்திறப்பு..!!