மூணாறு நிலச்சரிவில் உறவினர்களை பறிகொடுத்த தூத்துக்குடி கிராம மக்கள் கண்ணீர்: இ-பாஸ் பெற்று கேரளாவுக்கு படைெயடுப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் மானூர் அருகே பிள்ளையார்குளம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை சேர்ந்த கிராம மக்கள் மூணாறு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ளதால் இ பாஸ் பெற்று உறவினர்கள் அங்கு படையெடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் மானூர் அருகே பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த பலர் மூணாரில் ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் மண்ணில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அக்கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த கேபிள் குமார் கூறுகையில், தனது சகோதரர் முருகன் (49), அவரது மனைவி ராமலட்சுமி (46) மகள் திவ்யா (19) ஆகியோர் நிலச்சரிவில் புதையுண்டதாக தெரிவித்தார். நிலச்சரிவையடுத்து பிள்ளையார்குளத்திலிருந்த உறவினர்கள் நேற்று முன்தினம் இ பாஸ் பெற்றுக்கொண்டு மூணாறு சென்றுள்ளனர்.

குடும்பம், குடும்பமாக பலி:  நிலச்சரிவில் புதையுண்டவர்களில் 55க்கும் மேற்பட்டவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதிநகரை சேர்ந்தவர்கள்.  உறவினர்களின் நிலை பற்றி அறிய முடியாமல் பாரதிநகர் பகுதியே சோக மயமாக உள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்களை ஊருக்கு அனுப்ப இயலாது என கேரள அரசு கூறியுள்ள நிலையில் தமது உறவினர்களின் முகத்தையாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஏக்கத்தில் 7 வாகனங்களில் சுமார் 60 பேருக்கும் மேற்பட்டோர் மூணாறு பெட்டிமுடிக்கு சென்றுள்ளனர்.

கயத்தாறு பாரதிநகரை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் குடும்பத்தில் அவருடன் மனைவி தவசியம்மாள், மகள்கள் மவுனிகா, கவுசல்யா ஆகியோர் மரணமடைந்தனர். இதில் மவுனிகா, கவுசல்யா இருவரும் கயத்தாறு பள்ளியில் படித்து வந்த நிலையில்  கொரோனா விடுமுறைக்காக மூணாறு சென்று பெற்றோருடன் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல அனந்தசிவன், அவரது மனைவி வேல்த்தாய், மகன் பாரதிராஜா, அவரது மனைவி ரேகா, அவர்களின் குழந்தைகள் அசுவத்ராஜா, லக்க்ஷா ஆகியோரும் புதையுண்டனர். மேலும் சண்முகையா அவரது இரு மனைவிகளான கருப்பாயம்மாள், சரஸ்வதி, அவர்களின் மூத்த மகள் சீதாலட்சுமி, அவரது கணவர் கண்ணன், அவர்களது 3 குழந்தைகள், இரண்டாவது மகள் ஷோபனா அவரது கணவர் ராஜா, அவர்களின் பெண் குழந்தை, மூன்றாவது மகள் கஸ்தூரி, அவரது கணவர் பிரதீப் மற்றும் அவர்களின் 2 பெண் குழந்தைகள் என 10 பேரும் புதையுண்டனர்.

Related Stories: