×

கேரள தங்கக்கடத்தல் வழக்கு!: தங்கராணி ஸ்வப்னா, சந்தீப் உள்ளிட்டோரின் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை..!!

திருவனந்தபுரம்: தங்கக்கடத்தல் விவகாரத்தில் தங்கராணி ஸ்வப்னா, சந்தீப் நாயர் உள்ளிட்ட 9 பேரின் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. கேரளாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் தங்கக்கடத்தல் வழக்கில் தினந்தோறும் புதிய புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ., சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக ஐக்கிய அரபு அமீரக தூதரக பெயரில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் 9 பேரின் சொத்துக்களை முடக்கப்படவிருக்கின்றன.

இது தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குனரகம் கேரள பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி.க்கு கடிதம் ஒன்றினை எழுதியிருக்கிறது. அதில், தங்கராணி ஸ்வப்னா, சந்தீப் நாயர், சரித் உள்ளிட்ட 9 பேருக்கு சொத்துக்கள் எங்கெங்கு உள்ளன, எந்தெந்த இடங்களில் கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன என்ற விவரங்கள் அந்த கடிதத்தில் கோரப்பட்டிருக்கின்றன.

இது தொடர்பான முழு விவரங்களை உடனடியாக அனுப்புமாறு மாவட்ட பதிவாளர் அலுவலகங்களை ஐ.ஜி. கேட்டுக் கொண்டுள்ளார். தங்கக்கடத்தல் விவகாரத்தில் சட்ட விரோத பண பரிவர்த்தனை, ஹவாலா மற்றும் பினாமி பண பரிமாற்றங்கள் நடந்திருப்பது தெரியவந்ததை அடுத்து, ஸ்வப்னா, சந்தீப் நாயர், சரித் ஆகியோரை கைது செய்துள்ள அமலாக்கத்துறை அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Tags : Sandeep ,Enforcement ,Kerala ,Thangarani Swapna , Kerala gold smuggling case, Swapna ,Sandeep ,
× RELATED சினிமா பிரபலங்கள், பொதுமக்கள்...