×

கஷ்டப்படறாங்களேன்னு துபாயில் இருந்து மீட்டு வந்தால்... சென்னை விமானத்தில் 1.48 கிலோ தங்கம் கடத்தினர்

* 5 பேர் விமான நிலையத்தில் கைது
* கொரோனாவில் தப்பினர்; சிறையில் சிக்கினர்
* சொப்னா சுரேஷ் ‘லிங்க்’ குறித்தும் விசாரணை

சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த சிறப்பு மீட்பு விமானத்தில் ரூ.82.3 லட்சம் மதிப்புடைய 1.48 கிலோ தங்கம் கடத்தி வந்த 4 பேர், கடத்தல் தங்கத்தை வாங்கி செல்ல வந்த ஒருவர் உட்பட 5 பேரை சென்னை விமானநிலைய போலீசார் பிடித்து சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். துபாயில் சிக்கித்தவித்த இந்தியர்களில் 180 பேரை ஏற்றி கொண்டு ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு மீட்பு விமானம் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சர்வதேச விமானநிலையம் வந்தது. அனைவருக்கும் மருத்துவம், குடியுரிமை, சுங்கச் சோதனைகள் முடித்து 14 நாட்கள் தனிமைப்படுத்த ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். விமான நிலையத்திலிருந்து தனிமைப்படுத்த ஓட்டல்கள் மற்றும் அரசின் இலவச தங்குமிடங்களுக்கு  அழைத்து செல்ல தனிதனி பஸ்களில் ஏற்றினர்.

அப்போது மேலக்கோட்டையூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் தங்க வைக்க 78 பேரை ஏற்றிகொண்டு 3 சிறப்பு தனி பஸ்கள் புறப்பட தயாரானது. அப்போது ஒரு பஸ் அருகே நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி, பஸ்சில் இருந்த ஒரு பயணியிடம் பணத்தை கொடுத்துவிட்டு, அவர் கொடுத்த பார்சலை வாங்கி அவசரமாக தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்தார். பஸ்கள் புறப்பட்டு சென்றுவிட்டன. அங்கு காவல் பணியிலிருந்த விமானநிலைய போலீசார் பணம் கொடுத்த நபரை சுற்றி வளைத்து சரமாரியாக கேள்வி கேட்டனர். அதற்கு அந்த மர்ம நபர், அவர் கொடுத்த பார்சலில் அவருடைய பழுதடைந்த வாட்ச், மருந்து சீட்டுகள் தான் இருக்கின்றன என்றார்.

ஆனாலும் போலீசார் சந்தேகத்தில் அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதனுள் 4 சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்கள் இருந்தன. அதன் ஒவ்வொன்றிலும் கால், கால் கிலோ தங்கக்கட்டிகள் இருந்தன. மொத்தம் ஒரு கிலோ தங்கம் இருந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.52 லட்சம். இதையடுத்து போலீசார் தங்கத்தையும் மர்ம ஆசாமியையும் சென்னை விமான நிலைய சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். சுங்கத்துறையினர் நடத்திய விசாரணையில், மீட்பு விமானத்தில் வந்தவர்களில் 4 பேர் தலா கால் கிலோ தங்கத்தை மறைத்து எடுத்துவந்தனர்.

சுங்கச்சோதனைகள் முடிந்து வெளியே வந்ததும், அவர்களில் ஒருவர் மற்ற 3 பேரிடமிருந்த தங்கத்தை வாங்கி, தன்னிடமிருந்த தங்கத்தையும் சேர்த்து ஒரே பார்சலாக்கி கொண்டு பஸ்சில் ஏறினார். அதன்பின்பு பஸ்சுக்கு கீழே நின்ற இந்த ஆசாமியிடம் தங்கத்தை கொடுத்தார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் மேலக்கோட்டையூரில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்துக்கு சென்று தங்கம் கடத்தி வந்த 4 பேரை தனிமையிலிருந்து விடுவித்து விசாரணைக்காக சென்னை விமான நிலையம் அழைத்து வந்தனர்.

சுங்கத்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், துபாய் விமானநிலையத்தில் 2 ஆசாமிகள் அவர்களிடம் இந்த தங்கக்கட்டிகளை கொடுத்ததாகவும், பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கத்தை வாங்கி வந்ததாகவும் கூறினர். விசாரணையில்,  கடத்தல் தங்கத்தை வாங்க வந்தவர் சிவகங்கையை சேர்ந்த கலீல் அஹமது (24), தங்கத்தை கடத்திவந்தது சென்னையை சேர்ந்த காஜாமொய்தீன் (39), பீர்மொய்தீன் (33) உட்பட 5 பேரை கைது செய்தனர். இவர்கள் 5 பேரும் சென்னை, திருச்சி, சிவகங்கை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த தங்க கடத்தலுக்கும் கேரளா தங்கம் கடத்தல் சொப்னா சுரேஷ் கும்பலுக்கும் தொடா்பு உள்ளதா என்று என்ஐஏ விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் மீட்பு விமானத்தில் துணிச்சலாக ரூ. 82.3 லட்சம் மதிப்புடைய 1.48 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்டு சிக்கியுள்ள இவர்கள் 5 பேரிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் வெளிநாடுகளில் உணவு குடி நீர் இல்லாமல் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுவதற்காகத்தான் மீட்பு விமானம் மத்திய அரசு ஏற்பாடு செய்தது. ஆனால் மீட்பு விமானத்தை கடத்தலுக்கு பயன்படுத்தும் கொள்ளையர்களின் துனிச்சல் அதிகாரிளிடையே பெரும் அட்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  
இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chennai ,flight , 1.48 kg of gold smuggled on a flight from Dubai to Chennai
× RELATED சென்னையில் இருந்து மொரிஷியஸ்...