×

நீர்ப்பிடிப்பில் மழை பெய்தும் நிரம்பாத மருதாநதி: தண்ணீர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

பட்டிவீரன்பட்டி: நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்தும், தண்ணீர் திருட்டால் மருதாநதி அணை நிரம்பாமல் உள்ளது. எனவே தண்ணீர் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பட்டிவீரன்பட்டி அருகேயுள்ளது அய்யம்பாளையம் மருதாநதி அணை. இந்த அணைக்கு மழைக்காலங்களில் தாண்டிக்குடி மலைப்பகுதி, பண்ணைகாடு, பாச்சலூர், கடுகுதடி மலைப்பகுதி மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி பெய்யும் மழையால் நீர்வரத்து இருக்கும். அணையின் மொத்த உயரம் 74 அடியாகும். கடந்த சில நாட்களாக இந்த அணைக்கு வரும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

 இதனால் 20 கன அடிவரை தண்ணீர் வந்ததில் 34 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 38 அடியாக உயர்ந்தது. தற்போது அணைக்கு வந்து கொண்டிருந்த தண்ணீர் முற்றிலுமாக நின்றுவிட்டது. பொதுவாக மழை பெய்தால் தொடந்து மழை பகுதிகளில் நீர் ஊற்றுகள் உருவாகி தண்ணீர் வரத்து வந்து கொண்டுதான் இருக்கும் உடனடியாக நிற்காது. ஆனால் தற்போது அணைக்கு வரும் தண்ணீர் வராமல் நின்றுவிட்டது. இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘மருதாநதி அணை தண்ணீர் மூலமாக நிலக்கோட்டை, ஆத்தூர் ஆகிய 2 தாலுகாகளை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுவதுடன் பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சேவுகம்பட்டி போன்ற பேரூராட்சிகளுக்கும், சித்தரேவு, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி போன்ற ஊராட்சிகளுக்கு குடிநீர் ஆதரமாகவும் உள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை தனியார் சிலர் தாணிப்பாறை உள்ளிட்ட இடங்களில் ஜெனரேட்டர் மோட்டார் மூலம் உறிஞ்சி விடுகின்றனர். இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் தண்ணீர் வரும் பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் நாங்கள் சென்று ஆய்வு நடத்த முடியவில்லை என தெரிவிக்கின்றனர். எனவே தண்ணீர் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.       


Tags : catchment area ,Rainwater harvesting , Rain, henna, water theft
× RELATED நகராட்சி நடவடிக்கை இல்லை தெரு நாய்கள் தொல்லை