×

அயோத்தியில் பலத்த பாதுகாப்பு நாளை ராமர்கோயில் பூமி பூஜை: சிறப்பு அழைப்பிதழ் வெளியீடு

புதுடெல்லி: அயோத்தியில் நாளை ராமர்கோயில் பூமி பூஜை நடைபெற உள்ளது. இதற்கான சிறப்பு அழைப்பிதழ் நேற்று வெளியிடப்பட்டது. அதில் பிரதமர் மோடி மற்றும் மேலும் 3 முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் மீண்டும் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நாளை நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். கொரோனா பரவல் இருப்பதால் பல்வேறு கெடுபிடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விழா நடைபெறும் பகுதி முழுவதும் தினசரி கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வருவதை முன்னிட்டு அயோத்தி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அயோத்தி சென்று விழா முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார். பூமி பூஜை நடைபெற உள்ள ராம ஜென்மபூமி பகுதியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அனுமன் கர்கி கோயிலுக்கும் சென்று அவர் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளுக்கு அவர் சில உத்தரவுகளை பிறப்பித்தார். கொரோனாவால் பொலிவிழந்து காணப்பட்ட அயோத்தி நகரம் பூமி பூஜையால் மீண்டும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதற்கிடையே, உபியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அமலில் இருப்பதால் பொது இடத்தில் 5 பேருக்கு மேல் கூடக் கூடாது.

இதனால், விழா மேடையில் பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், மகந்த் நிரித்தியா கோபால்தாஸ் ஆகியோர் மட்டுமே பங்கேற்பார்கள்.
பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்க 150 முக்கிய பிரமுகர்களுக்கு சிறப்பு அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழில் குழந்தை ராமரின் படம் இடம்பெற்றுள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த அழைப்பிதழ் நேற்று வெளியிடப்பட்டது.

பாஜவின் முக்கிய நிகழ்ச்சி மற்றும் தேர்தல் வாக்குறுதியை மையமாக கொண்டு பிரதமர் மோடி 40கிலோ வெள்ளி செங்கல்லை கோயில் கட்டுமானத்தை தொடங்குவதற்காக நிறுவுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விழாவில் ராமர் கோயில் கட்டுவதற்காக பிரசாரம் மேற்கொண்ட முக்கிய மூத்த தலைவர்களான எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி ஆகியோர் பங்கேற்வில்லை. அத்வானி மற்றும் ஜோஷிக்கு தொலைபேசி மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டது. இருவரும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக விழாவில் கலந்து கொள்வார்கள். இது தவிர இஸ்லாமிய வழக்கறிஞர்களுள் ஒருவரான இக்பால் அன்சாரி என்பவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

* முதலில் அனுமனை வழிபடும் மோடி
அயோத்தி வரும் பிரதமர் மோடி முதலில் அங்குள்ள அனுமன் கர்கி கோயிலுக்கு சென்று வழிபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரும், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், அனுமன் கோயிலில் நடக்கும் சிறப்பு பூஜையில் பங்கேற்க உள்ளனர். அதைத்தொடர்ந்து ராமர் கோயில் பூமி பூஜைக்கு செல்கின்றனர். 10ம் நூற்றாண்டு கோயிலான அனுமர் கர்கியின் மகத்துவம் குறித்து அக்கோயில் குருக்கள் கூறுகையில், ‘‘அனுமன் இல்லாமல் ராமர் எந்த வேலையையும் செய்ய மாட்டார். அதனால்தான் முதலில் அனுமனிடம் ஆசீர்வாதம் பெற பிரதமரும், முதல்வர் யோகியும் வருகின்றனர். இங்கு அனுமனை தரிசித்த பின் அவர்கள் ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்பார்கள்’’ என்றார்.

* பிரதமர் சென்ற பின் வருவேன்: உமாபாரதி
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு கருதி பூமி பூஜையில் பிரதமர் மோடி வந்து சென்ற பின் தரிசிக்க வருவதாக பாஜ மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உமாபாரதி கூறி உள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவர் தனது டிவிட்டர் பதிவில், “நான் போபாலில் இருந்து புறப்படுகிறேன். அயோத்தியை அடைவதற்குள் நான் ஒருவேளை கொரோனா நோயால் பாதிக்கப்படலாம். அதனால் பிரதமர் மற்றும் மற்ற நபர்களிடம் இருந்து விலகி இருப்பதற்கு முடிவு செய்துள்ளேன். பிரதமர் மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் புறப்பட்டு சென்றபின்னர் விழா இடத்துக்கு செல்வேன்” என பதிவிட்டுள்ளார்.


Tags : Bhoomi Puja ,Ramarkoil ,Ayodhya , Ayodhya, Heavy Security, Tomorrow Ramarkoil, Bhoomi Puja, Release
× RELATED ராம நவமி நாளில் அயோத்தி ராமரின்...