தமிழக பாஜக துணை தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழக பாஜக துணை தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், எனக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பது போல உள்ளதால், மருத்துவர்களின் ஆலோசனை படியும், என் சுற்றத்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் என்னை தனிமைப்படுத்தி கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறி இருப்பதால் வீட்டுத் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக ட்வீட் செய்திருந்தார்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்குத் தொற்று இருப்பது நேற்று இரவு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் ஆலோசனையின்படி, பெங்களூருவில் உள்ள பழைய விமான நிலையம் அருகே இருக்கும் மணிபால் மருத்துவமனையில் எடியூரப்பா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எடியூரப்பாவின் மகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், உடல்நிலை சீராகவும், நலமுடன் இருக்கிறேன். மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். என்னுடைய கடந்த 10 நாட்களாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

Related Stories:

More
>