பட்டுக்கோட்டை அருகே சாமி சிலைகளை விற்க முயன்ற 3 பேர் கைது

பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த புக்கரம்பை கிராமத்தில் சாமி சிலைகளை கடத்தி, அதை விற்க முற்படுவதாக பட்டுக்கோட்டை நகர போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்பி தேஷ்முக்சேகர்சஞ்சய் உத்தரவின்பேரில், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. புகழேந்திகணேஷ் மேற்பார்வையில், நகர எஸ்.ஐ. தென்னரசு தலைமையில்,தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையானது கிடைத்த ரகசிய தகவலின்படி புக்கரம்பை கிராமத்திற்கு சென்றது. அங்கு சரவணன் என்பவரிடம் விசாரணை செய்தபோது அவர் கொடுத்த தகவலின்படி புக்கரம்பை கிராமத்தில் சுமார் 1 அடியில் நாராயணி சிலையும், முக்கால் அடியில் அனுமர் சிலையும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த 2 சிலைகளையும் விற்பதற்கு முற்படுவதும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சரவணனை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் அதே ஊரைச் சேர்ந்த பிரான்மலை, கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகாவை சேர்ந்த ஆண்டிச்சாமி என்கிற ராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2 சுவாமி சிலைகளையும் மீட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Related Stories: