×

கடத்திய தங்கத்தின் அளவு பற்றி முரண்பாடான தகவல் அதிகாரிகளை குழப்பும் சொப்னா கும்பல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்தப்பட்டது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் முக்கிய குற்றவாளியான சொப்னாவுக்கு தூதரகத்தில் பெரும் செல்வாக்கு உண்டு. துணை தூதர் மற்றும் அட்டாஷே என்று அழைக்கப்படும் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்களையும் சொப்னா தனது கைக்குள் வைத்திருந்தார். இதை தெரிந்துதான் சந்தீப் நாயர், சரித்குமார், ரமீஸ், பைசல் பரீத் ஆகியோருக்கு தூதரக பார்சலில் தங்கம் கடத்தும் தைரியம் வந்தது. சொப்னாவும் அதற்கு உடன்பட்டார்.  

கடந்த ஆண்டு ஜூனில்தான் கடத்தல் தொடங்கி உள்ளது. முதலில் தங்களின் திட்டம் பலிக்குமா? என்பதை பரிசோதிக்க, உணவு, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அடங்கிய 2 மாதிரி பார்சல்களை அனுப்பி வைத்தனர். அவை எந்த சிக்கலும்  இல்லாமல் கைக்கு வந்து சேர்ந்துள்ளன. அதன் பிறகே, அவர்களுக்கு நம்பிக்கை அதிகரித்தது. தொடர்ந்து கடந்த ஜூன் வரை 21 பார்சல்களில் தங்கம் கடத்தி உள்ளனர். ஒவ்வொரு பார்சலிலும் அதிகபட்சமாக 3.50 கிலோ தங்கம் கடத்தியதாக சுங்க இலாகாவிடம் இந்த கும்பல் கூறியுள்ளது. ஆனால், அதை சுங்க இலாகா நம்பவில்லை. ஒவ்வொரு பார்சலிலும் குறைந்தது 5 முதல் 10 கிலோ வரை கடத்தியிருக்கலாம் என்று அது கருதுகிறது.

கடந்த ஜூன் 24ம் தேதி வந்த பார்சலில் 16.50 கிலோவும், 28ம் தேதி 25 கிலோவும் இவர்கள் கடத்தி உள்ளனர். ஒவ்வொரு முறையும் தங்கத்தின் எடையை அதிகரித்து வந்துள்ளனர். கடைசியாக ஜூன் 30ம் தேதி சிக்கிய பார்சலில் மிக அதிகமாக 30  கிலோ தங்கத்தை கடத்தி உள்ளனர். இதுவரை எவ்வளவு தங்கம் கடத்தினோம் என்று சொப்னா கும்பல் விசாரணை அமைப்புகளிடம் கூறவில்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு கணக்கை கூறுகின்றனர். இதனால், உண்மையாக கடத்தப்பட்ட தங்கத்தின் அளவு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என்று சுங்க இலாகா கருதுகிறது. சொப்னா கும்பல் ஒவ்வொரு முறையும் அதிகாரிகளை குழப்பும் வகையிலேயே வாக்குமூலம் கொடுத்து வருகிறது.

தங்கம் கடத்தல் குறித்து அட்டாஷே ராஷித் காமிஸ் அல்சலாமிக்கு தெரியும் எனவும், ஒவ்வொரு முறையும் தங்கம் கடத்தும்  போது ரூ.1,500 டாலர் கொடுத்து வந்ததாகவும் கூறியுள்ளனர். இது குறித்து அட்டாஷேயிடம் விசாரித்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும். அவர் துபாயில் இருப்பதாலும், மத்திய அரசின் அனுமதியில்லாமல் விசாரணை நடத்த முடியாது என்பதாலும் தான் சொப்னா கும்பல் தங்களை குழப்புவதாக அதிகாரிகள் கருதுகின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி என்ஐஏ மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

* சிவசங்கரிடம் விஜிலென்ஸ் விசாரணை
ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் விசாரணை அமைப்புகள் பலமுறை விசாரித்துள்ளன. இருப்பினும், மீண்டும் எந்த நேரத்திலும் விசாரணை நடத்தப்படலாம் என்று தெரிகிறது. இந்த நிலையில் கேரள அரசும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. எர்ணாகுளத்தை சேர்ந்த செஷைர் டார்சன் லஞ்ச ஒழிப்பு இயக்குநரகத்துக்கு ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், ஐடி துறையில் ஏற்படுத்தப்பட்ட பல ஒப்பந்தங்கள், பணி நியமனங்களில் ஊழல்கள் நடந்துள்ளன. எனவே, முன்னாள் ஐடி செயலாளர் சிவசங்கரிடம் விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர், சிவசங்கர் மீது விசாரணை நடத்த அனுமதிகோரி கேரள முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். சிவசங்கர் ஐஏஎஸ் அதிகாரி என்பதால் அரசின் அனுமதியின்றி விசாரணை நடத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலாவும், சிவசங்கர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : gang , Kidnapped gold, quantity, contradictory information, officer, confusion, Sopna gang
× RELATED கொள்ளையனான தங்கம் வென்ற பாக்ஸர் கைது