×

அரசியல் தலைவர்களை சட்டவிரோதமாக அடைத்துவைப்பது ஜனநாயக மாண்பை குலைத்துவிடும்: ராகுல் காந்தி கருத்து

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்புச் செய்வதற்கு முதல் நாள் இரவில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, அவரின் மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் முன்னாள் முதல்வர்கள் மூவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதற்கிடையே முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகியோர் மீது பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காஷ்மீர் நிர்வாகம் அறிவித்தது. பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டால், விசாரணையின்றி ஓராண்டு வரை காவலில் வைத்திருக்க முடியும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து வீட்டுக் காவலில் இருந்த உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகிய இருவரும் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டனர். ஆனால் மெகபூபா முப்தியை விடுவிப்பது குறித்து எந்த முடிவையும் காஷ்மீர் நிர்வாகம் எடுக்கவில்லை. இந்நிலையில் மெகபூபா முப்திக்கு விதிக்கப்பட்டிருந்த பொது பாதுகாப்புச் சட்டம் வரும் ஆகஸ்ட் 5ம் தேதியுடன் முடிவதால், காவலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து, ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அரசியல் தலைவர்களை சட்டவிரோதமாக அடைத்துவைப்பது ஜனநாயக மாண்பை குலைத்துவிடும். மெஹபூபா முப்தியை விடுவிக்க வேண்டிய சரியான தருணம் இது தான், என கூறியுள்ளார். 


Tags : leaders ,Rahul Gandhi , Rahul Gandhi, Mehbooba Mufti, house arrest
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...