×

கடன் ஒத்திவைப்பு சலுகை இந்த மாதத்துடன் நிறைவு: இஎம்ஐ.யை நினைத்து கவலைப்படாதீங்க சுமையை குறைக்க இப்படியும் வழியிருக்கு

சென்னை: கொரோனா பயத்தை விட, ஊரடங்கை அரசு நீட்டித்து விடக்கூடாதே என்ற கவலைதான் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. காரணம், வருவாய் இழப்பு. இதில் கடன் தவணைகளை வேறு சமாளிக்க வேண்டும். இப்படி கையை பிசைந்து கொண்டிருந்த நேரத்தில்தான், 3 மாத கடன் தவணை ஒத்திவைப்பு சலுகையை அறிவித்தது ரிசர்வ் வங்கி. பின்னர் மேலும் 3 மாதம் நீட்டித்தது. இந்த சலுகை வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. வட்டி அதிகமாகும் என்றாலும், வேறு வழியின்றி இந்த சலுகையை பலர் பயன்படுத்தினர்.

ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, 41.9 சதவீத பெரு நிறுவனங்கள், 65 சதவீத குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர், 55.3 சதவீத தனிநபர்கள் கடன் தவணை சலுகையை பயன்படுத்திக் கொண்டுள்ளனர். ஒட்டுமொத்த அளவில் கடன் தவணை சலுகையை பயன்படுத்தியவர்கள் 50.1 சதவீதம். இனி, அடுத்த மாதம் முதல் இஎம்ஐ கட்டியே ஆக வேண்டிய நிலை. இதற்கென தனியாக பணத்தை புரட்ட வேண்டியது ஒருபுறம் இருந்தாலும், சுமையை சற்று குறைக்க முடியும். அதற்கான வழிகள் இதோ:

இஎம்ஐ எவ்வளவு குறையும்?
நீங்கள் கட்ட வேண்டிய கடன் இன்னும் 10 லட்சம் பாக்கி இருப்பதாக வைத்துக்கொள்வோம். இன்னும் 8 ஆண்டில் இது முடிவடைவதாக இருந்தால், 9.05 சதவீத வட்டி அடிப்படையில், வட்டி மட்டும் சுமார் 4 லட்சம் கட்ட வேண்டி வரும். இதில் சுமார் ஒரு சதவீதம் குறைத்து விட்டால் கூட, வட்டி சுமார் 3.4 முதல்3.6 லட்சம்தான் வரும். இதுபோல்,30 லட்சம் லோனுக்கு 8.5% வட்டி அடிப்படையில் ₹29,500 இஎம்ஐ கட்டுவதாக இருந்தால், 7.4%ஆக வட்டியை குறைத்தால் கூட இஎம்ஐ சுமார் 1900 மிச்சமாகும். உங்கள் சிபில் ஸ்கோர் அடிப்படையில்தான் இது கணக்கிடப்படுகிறது. எனவே, சிபில் ஸ்கோர் நன்றாக இருந்தால் வட்டி அதிகம் குறையும். இஎம்ஐ 500 குறையும். இஎம்ஐ.யை குறைக்காவிட்டால் கடன் சில மாதங்கள் முன்பாகவே முடிந்து விடும்.

வட்டியை குறைக்கலாம்
கடந்த 18 மாதங்களில் ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன் வட்டியை 2.25 சதவீதம் குறைத்துள்ளது. இதற்கேற்ப, வங்கிகள், நிதி நிறுவனங்கள், வீட்டுக்கடன் நிறுவனங்கள் வட்டியை குறைத்துள்ளன. சுமார் 9 சதவீதம் மற்றும் அதற்கு மேல் இருந்த வட்டி தற்போது சில வங்கிகளில் 7 சதவீதமாக குறைக்கப்பட்டு விட்டது. ஆனால், இன்னும் பலர் 8.5 சதவீதம், 9 சதவீதம் வட்டியை செலுத்தி வருகின்றனர். இவர்கள் சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிறுவனத்தை அணுகி, வட்டியை குறைக்க கோரலாம். இதற்காக சில ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிவரும்.

வட்டி முறையை மாற்றலாம்
எம்சிஎல்ஆர் முறையிலும், ரெப்போ வட்டி அடிப்படையிலும் கடன் வட்டி நிர்ணயிக்கப்படுகிறது. எம்சிஎல்ஆர் முறையில் நீங்கள் இருந்தால், இதை ரெப்போ அடிப்படையில் மாற்ற வங்கியிடம் கோரலாம். அவ்வாறு செய்யும்போது, ரிசர்வ் வங்கி வட்டி குறைப்புக்கு ஏற்ப உங்களுக்கும் பலன் கிடைக்கும்.

மாற்று வழிகள் என்ன?
வங்கிகளில் ஏதேனும் பிக்சட் டெபாசிட் வைத்திருந்தால், அவற்றை எடுத்து முன்பணமாக கடனை அடைக்க பயன்படுத்தலாம். ஏனெனில், வங்கி பிக்சட் டெபாசிட்டுக்கு தரும் வட்டியை விட, வீட்டுக்கடன் வட்டி அதிகமாக இருக்கும். அல்லது, பிஎப் தொகை இருந்தால் அதை எடுத்தும் கடனில் ஒரு பகுதியை அடைக்கலாம். தங்கத்தின் விலை அதிகமாக இருப்பதால், நகையை விற்றும் கடனை அடைக்கலாம். இதனால் அசல் தொகை உடனே குறைந்து, வட்டியும் மிச்சமாகும். இஎம்ஐ குறையும்.



Tags : EMIs , Debt deferral, concession, EMI
× RELATED 1 முதல் 5ம் வகுப்பு வரை ‘எமிஸ்’...