×

ராமர் கோயில் பூமி பூஜைக்கு அழைப்பதில் திடீர் சர்ச்சை அத்வானி, ஜோஷியை புறக்கணித்தது பாஜ: உமாபாரதி, கல்யாண் சிங்குக்கு மட்டும் அழைப்பு

புதுடெல்லி: ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்க பாஜ மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் அழைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இந்த 2 பேர் மட்டும் திடீரென புறக்கணிக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது்.
 அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை வரும் 5ம் தேதி நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் 200 பேர் பங்கேற்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் பங்கேற்கும்படி பாஜ மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கும் அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்த இருவரும் ராமர் கோயில் விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே மிக தீவிரமாக இருந்து வந்தவர்கள்.

இந்நிலையில், பூமி பூஜைக்கு எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என நேற்று காலை திடீரென தகவல்கள் வெளியாகின. இவர்கள் இருவரும் சமீபத்தில், 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக தங்களின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். அதே சமயம், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தொடர்புடைய மற்ற பாஜ தலைவர்களான உமா பாரதி, உபி முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் ஆகியோருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மோடி பிரதமர் ஆனதும் கட்சியிலிருந்து அத்வானி, ஜோஷி ஆகிய மூத்த தலைவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில், ராமர் கோயில் பூமி பூஜையிலும் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாதது சர்ச்சையானது.

அதே சமயம், இரு தலைவர்களுக்கும் 90  வயதுக்கு மேல் ஆகி விட்டதால், உடல் நிலை கருதி அவர்களுக்கு அழைப்பு  விடுக்கப்படவில்லை என்றும் அரசு தரப்பில் தகவல்கள் கூறப்பட்டது.  அத்வானி, ஜோஷி உள்ளிட்ட 10 மூத்த தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம்  விழாவில் பங்கேற்க வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளதாக கூறப்பட்டது.   விழா மேடையில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ராமஜென்மபூமி நியாஸ் தலைவர் நிருத்யா கோபால் தாஸ் மற்றும் மேலும் 2 தலைவர்கள் மட்டுமே இருப்பார்கள் என கூறப்பட்டது.

கொரோனா பரவலால் உபி.யில் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் காரணமாக, விழா மேடையில் 5 பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்றும், வயதான மூத்த தலைவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்பார்கள் என்றும் உபி அரசு அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர். இந்நிலையில், அத்வானி, ஜோஷிக்கு அழைப்பு விடுக்கப்படாததால் கட்சிக்குள் பெரும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, நேற்று அவசர அவசரமாக அவர்கள் தொலைபேசி மூலமாக பூமி பூஜையில் பங்கேற்க அழைக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் மோடியே பங்கேற்க முடியாது?
அத்வானி, ஜோஷிக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு, அவர்களின் வயதை பாஜ காரணம் காட்டியுள்ளது. அதே நேரம், உபி.யில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் பிரதமர் மோடியே ராமர் கோயில் விழாவில் பங்கேற்க முடியாது என மீடியா தகவல்கள் கூறுகின்றன. உள்துறை அமைச்சக விதிமுறையில், ‘65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். கோயில் விழாக்களில் அதற்கேற்ப மத அமைப்புகள் ஆலோசனை வழங்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி பார்த்தால், பிரதமர் மோடி (69 வயது), அத்வானி (92), மோகன் பகவத் (69), முரளி மனோகர் ஜோஷி (86), கல்யாண் சிங் (88) என யாரும் பங்கேற்க முடியாது.

ராமர் கோயிலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்பு
ராமர் கோயில் கட்டப்படுவதை காங்கிரஸ் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரசின் அம்மாநில தலைவருமான கமல்நாத் அளித்த பேட்டியில், ‘‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை வரவேற்கிறேன். நாட்டு மக்களின் நீண்ட நாளைய விருப்பம் இது. அயோத்தியில் அனைத்து இந்தியர்களின் ஒப்புதலுடனேயே ராமர் கோயில் கட்டப்படுகிறது. இந்தியாவில் மட்டுமே இது சாத்தியமாகும்’’ என்றார். மற்றொரு மூத்த தலைவரான திக்விஜய் சிங் கூறுகையில், ‘‘இந்தியர்களுடைய நம்பிக்கையின் மையப்புள்ளியாக ராமர் இருக்கிறார். ராஜிவ்காந்தி கூட ராமர் கோயிலை கட்ட விரும்பினார்’’ என்றார்.

Tags : Advani ,Joshi ,Ram temple ,Bhoomi Puja Advani ,Bhoomi Puja , Ram Temple, Advani, Joshi, Baja, Uma Bharti, Kalyan Singh
× RELATED ராமர் கோவில் உள்ள அயோத்தியில்...