×

தடையால் வெறிச்சோடிய குந்தாரப்பள்ளி வாரச்சந்தை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை கூடுகிறது. ஆடு, மாடு, கோழிகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடக மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள், விவசாயிகள் சந்தைக்கு வந்து இவற்றை வாங்கி செல்வது வழக்கம். வாரந்தோறும் சுமார் 5 கோடிக்கு சந்தையில் வர்த்தகம் நடைபெறும். இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் மாத இறுதியில் வாரச்சந்தைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இதனால் விவசாயிகள், வியாபாரிகள், தங்களது கால்நடைகளை, ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் அழைத்து வந்து, சாலையோரம் நிறுத்தி, விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், இன்று (1ம் தேதி) பக்ரீத் பண்டிகை மற்றும் ஆடிப்பெருக்கு விழாவிற்கு, அதிகளவில் ஆடுகளை வாங்க, வியாபாரிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இ-பாஸ் பிரச்னையால் விவசாயிகள் ஆடு, மாடு மற்றும் கோழிகளை விற்பனைக்கு கொண்டு வர முடியவில்லை. இதனால் நேற்று குந்தாரப்பள்ளியில் சாலையோரம் செயல்பட்ட வாரச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.


Tags : Ban, Kundarappalli, Warachchandai
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...