×

தமிழகம் முழுவதும் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர் சேலத்தில் பிடிபட்ட ரவுடி கும்பல் குறித்து பகீர் தகவல்

சேலம்: சேலத்தில் போலீசார் சுற்றிவளைத்தபோது 40 அடி உயரத்தில் இருந்து குதித்து தப்ப முயன்ற சிவகங்கை  ரவுடி கும்பல் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை தாணிச்சாயூரணியை சேர்ந்தவர் ராஜபாண்டி. இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் இருக்கிறது. இவரது தந்தை வெளிநாட்டில் இருப்பதால், அவர் அனுப்பும் பணத்தை வைத்து கந்துவட்டி கொடுத்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 21ம் தேதி ரவுடி கும்பல் ஒன்று வெடிகுண்டை வீசியது. இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டது. இதில் தேடப்பட்டு வந்த ரவுடி கும்பல் சேலத்தில் பதுங்கியிருப்பதை தெரிந்து கொண்ட போலீசார், நேற்றுமுன்தினம் அதிகாலை அந்தவீட்டை முற்றுகையிட்டனர். போலீசார் சுற்றிவளைத்ததை தெரிந்து கொண்ட ரவுடிகள், 40 அடி உயரம் கொண்ட வீட்டின் மாடியில் இருந்து குதித்தனர்.

இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். மாடியில் இருந்து குதித்தது ஆறாவயல் பக்கமுள்ள பனங்கட்டின்வயல் முத்துராமன்(27) அமராவதிபுதூரைச் சேர்ந்த மதிபாலன்(23), தாணித்தாயூரணியை சேர்ந்த விஜி(எ) விஜயகுமார்(27) என்பது தெரியவந்தது. இவர்களில் முத்துராமனுக்கும், மதிபாலனுக்கும் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. ஆறாவயல் போலீஸ் ஸ்டேசனில் முத்துராமனுக்கு ரவுடி ஷீட் இருப்பதும், இவர் மீது கொலை முயற்சி, ஆயுதவழக்கு உள்பட 6 வழக்குகளும் உள்ளது. மதிபாலன் மீதும் கொலை முயற்சி, திருட்டு, ஆயுதவழக்கு உள்பட 7 வழக்குகள் இருக்கிறது. விஜயகுமார் மீது வழிப்பறி உள்பட 4 வழக்கு உள்ளது. இவர்கள் 3 பேரையும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதற்காக சேலம் 3வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கைது செய்ததற்கான வாரண்டை ஆஜர்படுத்தினர். இதையடுத்து 3 பேருக்கும் நீதித்துறை நடுவர் உத்தரவின் பேரில், நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இன்று காலை முடிவு தெரியும். இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில், ராஜபாண்டி தலைமையில் ஒரு கோஷ்டியும், மதிபாலன் தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டு வந்துள்ளது. இதில் விஜயகுமாரின் தாயை ராஜபாண்டி உள்பட 5 பேர் அடித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், ராஜபாண்டியை தீர்த்து கட்டும் நோக்கத்தில் கூட்டாளிகளுடன் சேர்ந்து வெடிகுண்டை வீசியுள்ளார். பிடிபட்ட இவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்’ என்றனர்.

Tags : gang ,activities ,Pakir ,Salem ,Tamil Nadu , rowdy gang ,Salem ,criminal activities ,Tamil Nadu
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை