×

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் ரூ.146 கோடியில் மருத்துவமனைகளில் புதிய தனிமை வார்டு ஆக்சிஜன் சிலிண்டருடன் படுக்கை வசதி: நோயாளிகளை அனுமதிப்பதில் ஏற்படும் தாமதத்தை தடுக்க நடவடிக்கை

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, ரூ.146 கோடி செலவில் மருத்துவமனைகளில் புதிதாக வார்டு, படுக்கை வசதி ஆக்சிஜன் சிலிண்டர் வசதி செய்து தருவதற்கான வேலைகள் நடந்து வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக சென்னை மட்டுமன்றி மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரேனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி பற்றாக்குறையால் உடனடியாக அட்மிஷன் போட்டு சிகிச்சையை தொடங்க முடியவில்லை. இதை தொடர்ந்து புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட வார்டு மற்றும் படுக்கை வசதிகள் செய்து தர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை, வட்டம், வட்டம் சாரா மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் புதிதாக வார்டு, படுக்கை வசதி, ஆக்சிஜன் சிலிண்டர் வசதி செய்து தர திட்டமிடப்பட்டுள்ளது.  

எனவே தமிழகம் முழுவதும் மொத்தம் ரூ.146 கோடியில் 12,854 படுக்கைகள் கொண்ட வார்டுகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் வசதி செய்யப்படுகிறது. இதில், ரூ.50.06 கோடியில் மட்டும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக பைப்லைன் மூலம் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் தரப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக, திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இப்பணிகள் அவசர காலப்பணிகள் என்பதால் தற்போது அரசு நிதிக்காக தாமதம் செய்யாமல் இருக்க ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் நடந்து வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

* எந்ததெந்த மாவட்டங்கள்?
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.43.11 கோடி செலவில் 2,345 படுக்கைகள், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம் மாவட்டத்தில் ரூ.8.91 கோடி செலவில் 1,457 படுக்கைகள், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.19.06 கோடியில் 1,357 படுக்கைகள், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.18.60 கோடியில் 1,025 படுக்கைகள், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டத்தில் ரூ.5.34 கோடியில் 1,547 படுக்கைகள் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் ரூ.5.87 கோடியில் 745 படுக்கைகள், தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர் மாவட்டத்தில் ரூ.14.30 கோடியில் 1,547 படுக்கைகள், திருச்சி, பெரம்பலூர்,கரூர், புதுக்கோட்டை  மாவட்டத்தில் ரூ.8.61 கோடியில் 457 படுக்கைகள், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் ரூ.22.26 கோடியில் 2,347 படுக்கைகள்.


Tags : delays ,hospitals , Corona damage, Rs 146 crore, hospital, new isolation ward, with oxygen cylinder, bed facility
× RELATED அனைத்து மாநகராட்சிகளிலும் சித்த...