×

கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்லா கட்டும் கள்ளச்சாராய வியபாரிகள்

காஞ்சிபுரம்: கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தகவிக்கின்றனர். ஆனால், காஞ்சிபுரம் அடுத்த ஆற்பாக்கம் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை கனஜோராக நடக்கிறது. காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் ஆற்பாக்கம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகிலேயே திருவண்ணாமலை மாவட்டத்தின் சுருட்டல் கிராமம் அமைந்துள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டபோது, 2 மாவட்ட எல்லையான ஆற்பாக்கம் மற்றும் சுருட்டல் கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை தொடங்கியது.

இந்த பகுதிகளில், கள்ள சாராயம் மலிவு விலையில் கிடைப்பதால், ஏராளமான குடிமகன்கள், இந்த பாக்கெட் சாராயத்தை நாடுகின்றனர். கள்ள சாராயத்துக்கான போதை பவுடரை வெளியூர்களில் இருந்து வாங்கி வரும் வியாபாரிகள், அதில் தண்ணீரை கலந்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்கின்றனர்.கொரோனா ஊரடங்கால் வேலையின்றி தவிக்கும் நிலையில் குடிமகன்கள் பலர், வீட்டில் பெண்களிடம் தகராறு செய்து பணத்தை பறித்து வந்து, கள்ள சாராயத்தை குடித்துவிட்டு ரகளை செய்வதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட மாகறல் போலீசில் புகார் அளித்தால், போலீசார் வருவதை அறிந்து கொண்டு, சாராய வியாபாரிகள் திருவண்ணாமலை மாவட்ட எல்லையான சுருட்டல் ஏரிக்கரைக்கு சென்று, தங்கள் வியாபாரம் செய்கின்றனர். திருவண்ணாமலை மாவட்ட  தூசி போலீசார் வந்தால், ஆற்பாக்கம் பகுதிக்கு படையெடுக்கின்றனர் என பொதுமக்கள் கூறுகின்றனர். உயிரை பறிக்கும் ஆபத்து நிறைந்த பாக்கெட் சாராயத்தை, விபரீதம் உணராமல் குடிமகன்கள் குடிப்பதால், பெரிய அளவில் அசம்பாவித சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது. இதற்கு, 2 மாவட்ட போலீசாரும், கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Tags : merchants ,curfew ,stoning ,Corona ,death , Corona curfew, stone building, counterfeit traders
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...