×

அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜைக்கு பக்தர்கள் வரவேண்டாம்: ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வேண்டுகோள்..!!

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆண்டுக்கணக்கில் நடந்த சட்ட போராட்டங்கள் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தன. அங்கு கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து இதற்கான பணிகளை விசுவ இந்து பரி ஷத், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. இதற்காக ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டு உள்ளது.

ராமர் கோவில் கட்டுமான பணிகளை தொடங்க இந்த அறக்கட்டளை மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அயோத்தியில் பிரமாண்டமாக அமைய உள்ள ராமர் கோவிலுக்கு வருகிற 5-ந்தேதி பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கிறது. கோலாகலமாக நடைபெற உள்ள இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார்.

இந்த நிலையில், ராமர் கோவில்  பூமி பூஜை நடைபெறும் நிகழ்ச்சியை நேரில் காண பக்தர்கள் அயோத்திக்கு வர வேண்டாம் என்று ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.  இது தொடர்பாக அறக்கட்டளை தரப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: கடந்த 1984- ஆம் ஆண்டு முறைப்படி துவங்கப்பட்ட ராமர் கோவில் கட்டுமானப்பணிக்கான இயக்கத்திற்கு கோடிக்கணக்கான ராமர் பக்தர்களிடம் இருந்து பெரும் ஆதரவு கிடைத்தது.

கொரோனா தொற்று பரவலால் தற்போது உள்ள சூழலில் பக்தர்கள் கலந்து கொள்ள முடியாத சூழல் உள்ளது.  தற்போது பூமி பூஜை நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க புனித நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ள வேண்டும் என்பது அனைவருக்கும் இயற்கையான விருப்பமாகும். தற்போது  அடிக்கல் நாட்டு விழா தொலைக்காட்சி மற்றும் இணையதளத்தில் நேரலை செய்யப்படும். எனவே மக்கள் வீட்டில் இருந்து தொலைக்காட்சியில் காணலாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Devotees ,Ram Temple Bhoomi Puja ,Ayodhya , Ayodhya, Ram Temple Bhoomi Puja, Devotees, Foundation, Request
× RELATED 16 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் தரிசனம்